×

உன்னாவ் பலாத்கார வழக்கு பாஜ எம்எல்ஏக்கு சாகும் வரை சிறை: டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி: உன்னாவ் இளம்பெண் பலாத்கார வழக்கில், முன்னாள் பாஜ எம்எல்ஏ குல்தீப் சிங் சென்காருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. மேலும் அவருக்கு ரூ.25 லட்சம் அபராதமும்  விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ்  மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு தன்னிடம் வேலை கேட்டு வந்த 17 வயது சிறுமியை முன்னாள் பாஜ எம்எல்ஏ குல்தீப் சிங் சென்கார் பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். சென்கார், உன்னாவ் மாவட்டத்தின் பங்கார்மாவ் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். இதனால், புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, மாமா மீது கொலை,  திருட்டு என 28 வழக்குகள் இருப்பதாக குற்றம்சாட்டினர். மேலும், சென்காரின் ஆதரவாளர்கள் கொடுத்த பொய்யான புகாரில் பெண்ணின் தந்தையை போலீசார் கடந்த 2018ல் கைது செய்தனர்.

போலீசாரின் நடவடிக்கையால் விரக்தி அடைந்த இளம்பெண் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டு முன்பாக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அடுத்த நாளே அவரது தந்தை போலீஸ் கஸ்டடியில் மர்மமான முறையில் இறந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்ணின் தந்தையை சென்காரின் தம்பி உள்ளிட்டவர்கள் போலீசார் முன்னிலையிலேயே கடுமையாக தாக்குவது போன்ற வீடியோக்களும் வெளியாகின. இதையடுத்து அலகாபாத் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. பின்னர் சென்கார் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பல்வேறு அரசியல் காரணங்களால் இந்த வழக்கு விசாரணை ஆமை வேகத்தில் நகர்ந்தது. அதே சமயம், சென்காரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது குடும்பத்தினரும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர். அடுத்த சில நாட்களிலேயே இளம்பெண்ணும், அவரது வக்கீல் மற்றும் உறவினர்கள் சென்ற கார் மீது லாரி மோதியது.

இதில் இளம்பெண்ணின் 2 அத்தைகள் பலியாயினர். இளம்பெண்ணும், அவரது வக்கீலும் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் சென்காரும் அவரது ஆதரவாளர்களும் இருப்பது உறுதியானது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உன்னாவ் பெண் தொடர்பான 5 வழக்குகளையும் தினசரி விசாரணை நடத்தி 45 நாளில் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், நீதிபதி தர்மேஷ் சர்மா முன்பு இந்த வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கியது. அரசியல் நெருக்கடியால் குல்தீப் பாஜவில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த வழக்கில் சிபிஐ மற்றும் குல்தீப் தரப்பு வாதங்கள் கடந்த 9ம் தேதி நிறைவடைந்தது. பின்னர் 16ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி தர்மேஷ் சர்மா, குல்தீப் சென்சார் குற்றவாளி என தீர்ப்பளித்து, தண்டனை விபரத்தை ஒத்திவைத்தார். தனக்கு  கடுமையான தண்டனை வழங்காமல் கருணை காட்டும்படி குல்தீப் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், உன்னாவ் பலாத்கார வழக்கில் நேற்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: குல்தீப்புக்கு தண்டனையை குறைப்பதற்கான எந்த ஒரு காரணத்தையும் கண்டறிய முடியவில்லை. மேலும், அவர் மக்கள் பிரதிநிதியாக இருந்து, மக்களுக்கு நம்பிக்கை துரோகமும் செய்துள்ளார். எனவே அவருக்கு அதிகப்படியான தண்டனையாக, வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருக்கும்படியான ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. அவர் ரூ.25 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய்க்கு இழப்பீடாக கூடுதலாக ரூ.10 லட்சமும்  வழங்க வேண்டும். இத்தொகையை ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும்.பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பற்றி சிபிஐ மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆராய வேண்டும்.

டெல்லி மகளிர் ஆணையத்தால் தரப்பட்ட வீட்டில் பாதிக்கப்பட்ட பெண் மேலும் ஓராண்டுகள் தங்க அனுமதிக்க வேண்டும். அதற்கான மாத வாடகையாக ரூ.15,000 பணத்தை உபி அரசு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். கார் விபத்துக்குப் பின் டெல்லி எய்ம்சில் தீவிர சிகிச்சை பெற்ற உன்னாவ் பெண் தற்போது குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு நீதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கதறி அழுத சென்கார்
தண்டனை விபரம் அளிக்கப்படுவதையொட்டி, 53 வயதான சென்கார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். அவரது மனைவி மற்றும் மகளும் வந்திருந்தனர். சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு விபரத்தை  அறிவித்ததும், குல்தீப் நீதிமன்றத்திலேயே தனது மனைவி, மகளை கட்டிப்பிடித்து கதறி அழுதார். இதற்கு முன், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட போதும், நீதிமன்றத்தில் குல்தீப் கண்ணீர் விட்டு கதறியது குறிப்பிடத்தக்கது.

தூக்கு தண்டனை விதிக்கப்படாதது ஏன்?
போக்சோ சட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க முடியும். ஆனால், உன்னாவ் பலாத்கார சம்பவம் கடந்த 2017ல் நடந்தது என்பதால் சட்ட திருத்தம் செல்லாது.  எனவே, மரண தண்டனைக்கு பதிலாகத்தான் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Baja MLA ,Unni ,death ,Delhi , Unnao rape case, Baja MLA, jail, Delhi court
× RELATED நடிகை பலாத்கார வழக்கு விசாரணை நிறுத்திவைப்பு: கேரரளாவில் திடீர் பரபரப்பு