×

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் பேரணி: நெல்லை, கோவையில் கடைகள் அடைப்பு

சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தின் பல நகரங்களில் நேற்று பேரணி நடத்தப்பட்டது. கடலூரில் நடந்த பேரணியில் மோடி, அமித்ஷா உருவ பொம்மை எரிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின்போது, ஏ.டி.எஸ்.பி. மீது செருப்பு வீசப்பட்டது.  குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழகத்தின் பல இடங்களில் நேற்றும் போராட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நேற்று லால்பேட்டை அஞ்சலகம் அருகே உள்ள கைக்காட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக பகல் 12.30 மணிக்கு சிறப்பு தொழுகை அப்பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைபெற்றது. தொழுகை முடிந்தவுடன் முஸ்லிம் ஜமாஅத் அமைப்புடன் அதிமுக கூட்டணி அல்லாத அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் இணைந்து லால்பேட்டை முபாரக் பள்ளிவாசலில் இருந்து சுமார் 5 ஆயிரம் பேர் தேசியகொடியை ஏந்தி பேரணியாக கைக்காட்டிக்கு வந்து போராட்டம் நடத்தினர்.

 போராட்டத்தில் நடுவே சில இளைஞர்கள் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உருவபொம்மைகளை திடீரென எரித்து கோஷமிட்டனர். உடனே, போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். இதனால் போலீசாருக்கும் இஸ்லாமிய இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே கூட்டத்தில் இருந்து முகம் தெரியாத நபர் திடீரென பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஏ.டி.எஸ்.பி பாண்டியன் மீது செருப்பு வீசினார். இதனால் போலீசார் தடியடி நடத்தி கலைக்க தயாராகினர். இதனை உணர்ந்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். 700 பேர் கைது: ஈரோட்டில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் பல்வேறு இஸ்லாமிய சமுதாய அமைப்புகள் சார்பில் பேரணி நடந்தது. ஈரோடு பெருந்துறை ரோடு காலிங்கராயன் இல்லத்தில் இருந்து தொடங்கிய பேரணி கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றது.

பேரணியில் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர், கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று 15 பேர் மட்டுமே மனு அளிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, முக்கிய நிர்வாகிகள் 15 பேர் மனு அளிக்க சென்றனர். தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் மனுவை பெட்டியில் போட்டனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் மெஹ்தவியா ஜமாத் தலைமையில், பாலக்கோடு மெயின்ரோட்டில் உள்ள தபால் நிலையம் முன் ஆர்பாட்டம் நடந்தது. ஆனால், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 700 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுதலை செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் உடுமலையில் அனைத்து முஸ்லிம் ஜமாத் மற்றும் வட்டார ஜமா அத்துல் உலமா, ஆலிம்கள் சபை, அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து தாராபுரம் அண்ணாசிலை கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இதில் 2 ஆயிரம் முஸ்லிம்கள் பங்கேற்றனர். இதே போல் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கருப்புக்கொடி போராட்டம்
கோவையில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளான கோட்டைமேடு, உக்கடம்,  என்.எச். ரோடு மரக்கடை, ஆத்துபாலம், கரும்புக்கடை, குனியமுத்தூர்,  போத்தனூர் உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.  இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் தமுமுக, மமக, முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மேலப்பாளையத்தில் நேற்று ஒருநாள் முழு கடையடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா, விஎஸ்டி சந்திப்பு, கொட்டிகுளம் பஜார், ஆசாத் ரோடு, நேதாஜி ரோடு, மண்டல அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் 1500 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.


Tags : Muslims ,citizenship amendment Citizenship ,Tamil Nadu ,Coimbatore ,Tirunelveli , Citizenship Amendment, Tamil Nadu, Muslims march, paddy, Coimbatore, shops
× RELATED மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை...