அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 1 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடி நிதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழர்கள் அதிகமாக வாழும் வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகள் நிறுவப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று 28.6.2018 அன்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து வரப்பெற்ற கோரிக்கையில், தமிழ் இலக்கிய, பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்காக ஒரு தமிழ் இருக்கையை நிறுவிட ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.7 கோடி) அளவிலான தொகையை தமிழக அரசு நன்கொடை வழங்கி ஆதரவு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துக்கு எவ்வளவு நிதியுதவி தொகையை வழங்கலாம் என அரசு நிலையிலேயே நிதியுதவி தொகையை முடிவு செய்து வழங்கலாம் எனவும் தமிழ் வளர்ச்சி இயக்குநர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். அவரது கருத்துருவின் அடிப்படையில், அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு ரூ.1 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது. இந்த தொகை தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் பொருளாதார திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இருக்கை அமைப்பது தொடர்பான பணி முன்னேற்ற அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும். எந்த நோக்கத்திற்காக நிதி வழங்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும். திட்டம் உரிய காலக்கட்டத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும். காலதாமதம் ஏற்படின் பெறப்பட்ட நிதியுதவி தொகைக்கு உரிய வட்டியுடன் அரசுக்கு திரும்ப செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>