×

கேரளாவில் இருந்து காரில் தப்பி வந்து சேலத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள்: அடைக்கலம் கொடுத்தவர் பற்றி விசாரணை

சேலம்: கேரளாவில் இருந்து காரில் தப்பி வந்த தீவிரவாதிகள், சேலத்தில் தங்கியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.  கேரளாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருக்கும் இளைஞர்களை தேசிய புலனாய்வு பிரிவு (என்ஐஏ) அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதில், சேலத்தைச் சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதி லியாகத்அலி தலைமையில் 5 பேர், கேரளாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். லியாகத்அலி, அதிகாரிகள் பிடியில் சிக்கினான்.அவனின் கூட்டாளிகளான கன்னியாகுமரியைச் சேர்ந்த சையத் அலி நிவாஷ், அப்துல் சமீம், பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் சமது, காஜாமொகைதீன் ஆகிய 4 பேர், கன்னியாகுமரி வழியாக தமிழகத்திற்கு ஊடுருவினர். அந்த 4 பேரும் இந்து தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் தீவிர சோதனையை நடத்தி வருகின்றனர். 4 பேரின் புகைப்படத்தையும் போலீசார் வெளியிட்டு, பொதுமக்களிடம் காட்டி விசாரித்து வருகின்றனர்.

தீவிரவாதிகளாக கருதப்படும் 4 பேரும், கடந்த வாரத்தில் சேலத்திற்கு வந்து சென்ற தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “கேரளாவில் லியாகத்அலியை என்ஐஏ அதிகாரிகள் சுற்றி வளைத்தவுடன், வெள்ளை நிற காரில் கூட்டாளிகள் 4 பேரும் தமிழகத்திற்கு தப்பி வந்துள்ளனர். அவர்கள் சேலத்திற்கு வந்து லியாகத்அலியுடன் தொடர்பில் இருக்கும் நபரிடம் தஞ்சம் அடைந்துள்ளனர். அப்போது போலி முகவரியில் பெறப்பட்ட 10 சிம்கார்டுகளை பெற்றுக்கொண்டு, சேலத்தில் இருந்து தப்பி உள்ளனர். தப்பிச்செல்ல அவர்கள், மற்றொரு ஆம்னி காரை பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் சேலத்தில் யாரை எல்லாம் சந்தித்து பேசினார்கள் என்பது பற்றி உளவு பிரிவு போலீசாரும், என்ஐஏ அதிகாரிகளும் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தப்பிய 4 பேரையும் பிடிக்க  தேடுதல் வேட்டை நடந்து வருகிறது’’ என்றனர்.

ரயில்களில் 3வது நாளாக சோதனை
தமிழகத்திற்குள் ஊடுருவிய தீவிரவாதிகளை பிடிப்பதற்காக ரயில்வே ஸ்டேஷன்கள், ஓட்டல்கள், லாட்ஜ்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 3வது நாளாக நேற்றும் ரயில்களில் சோதனை நடத்தப்பட்டது.


Tags : Terrorists ,Investigation ,Kerala ,Salem ,Hideouts ,militants , Kerala, Salem, Terrorists
× RELATED 133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்...