கடலூர் அருகே மீனவர் வலையில் பிரம்மோஸ் ஏவுகணை உதிரிபாகம் சிக்கியது

கடலூர்: கடலூர் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது மீனவர் வலையில் பிரம்மோஸ் ஏவுகணை உதிரிபாகம் சிக்கியது. கடலூர் அருகே உள்ள தாழங்குடா கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர்கள் அறிவழகன், மணிகண்டன் ஆகியோர் நேற்று வழக்கம் போல் மீன் பிடிக்க படகில் சென்றனர். கடலூர் கடல்பகுதியில் 24 கிலோ மீட்டர் கடல் மைல் தூரத்தில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அவரது வலையில் அதிக எடையுள்ள மீன் சிக்கியதாக கருதி வலையை இழுத்து உள்ளனர். அப்போது, வலையில் உருளை போன்ற ஒரு பொருள் சிக்கி இருந்தது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான மீனவர்கள் அப்பொருளை வலையுடன் சேர்த்து தாழங்குடா கடல் பகுதிக்கு இழுத்து வந்தனர்.

பின்னர் வலையிலிருந்த பொருளை அப்புறப்படுத்தி விட்டு கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். மீட்கப்பட்ட பொருள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொருளை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அது 2018ம் ஆண்டில் சோதனை மேற்கொள்ளப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை உதிரி பாகம் என கூறப்படுகிறது. உதிரி பாகத்தை மீட்ட போலீசார் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட ஏவுகணை ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதிரிபாகம் அதனுடைய தன்மை என்ன என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணையில் தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பாகத்தின் எடை சுமார் 60 முதல் 70 கிலோ வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories: