அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலை-க்கு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலையில், தமிழ் இருக்கை அமைக்க ரூபாய் 1 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் அறிவித்திருந்தார். ரூபாய்  7 கோடி நிதி தேவைப்பட்ட நிலையில், தமிழக அரசு சார்பில் 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகள், பிற மாநில கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கை நிறுவ ஆண்டுதோறும் ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கடந்த ஆண்டு சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த கோரிக்கையின் பேரில் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகை தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, பொருளாதார திறனாற்றல் குறித்து ஆய்வுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இருக்கை அமைப்பது தொடா்பான பணி முன்னேற்ற அறிக்கையை அரசுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். மேலும் ஒப்பளிப்பு செய்யப்படும் தொகைக்குரிய பயனீட்டுச் சான்றிதழை அந்தப் பல்கலைக்கழகத்திடம் இருந்து பெற்று அரசுக்கு தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் அனுப்ப வேண்டும். திட்டம் உரிய காலகட்டத்துக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால் பெறப்பட்ட நிதியுதவித்தொகை உரிய வட்டித் தொகையுடன் அரசுக்கு திரும்பச் செலுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories:

>