×

உள்ளாட்சி தேர்தல் எதிரொலி மணப்பாறை சந்தையில் களைகட்டியது ஆடு விற்பனை

*மட்டன் விலையும் எகிறியது

மணப்பாறை : உள்ளாட்சி தேர்தலையொட்டி கிராமங்களில் மட்டன் விலை கிலோவுக்கு ரூ.50 முதல் 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மணப்பாறை சந்தையில் நேற்று ஆடுகளின் விற்பனையும் விறுவிறுப்புடன் நடந்தது. உள்ளாட்சி தேர்தல் வரும் 27, 30ம் தேதிகளில் நடக்கிறது. இந்த தேர்தல் பேரூர், நகரம், மாநகரம் ஆகியவற்றை தவிர்த்து, கிராமங்களில் மட்டும் நடக்கிறது. தேர்தல், பிரசாரம் என்று வந்து விட்டால் யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் கிராமங்களிலும் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைய துவங்கிவிட்டது.

வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணியும் நடக்கிறது. தொடந்து பிரசாரம் தீவிரமடையும் என்ற போதிலும், கிராமங்களில் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களை இப்போதே செமையாக கவனிக்க தொடங்கி விட்டனர். தங்களுடன் சொந்த பந்தங்கள் மட்டுமல்லாமல் நட்பு வட்டாரத்தையும் வளப்படுத்தி வருகிறார்கள். இதற்காக அவர்கள் இப்போதே கறி விருந்து, மது விருந்து நடத்த தொடங்கி விட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை சந்தை மாட்டு வியாபாரத்திற்கு புகழ் பெற்றது என்ற போதிலும் இங்கு ஆடுகளும் விற்பனைக்கு வரும். செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை பிற்பகல் வரை சந்தை களைகட்டும்.

இந்த வாரம் வழக்கத்தை விட கிடாக்கள் விறுவிறுப்புடன் விற்பனையானது. சந்தைக்கு கொண்டு வரப்பட்ட கிடாக்கள் அனைத்தும் நேற்று முன்தினம் காலையிலேயே விற்று தீர்ந்தது. வழக்கமாக ஒரு கிலோ எடை இருந்தால் அது 600 ரூபாய் என்ற அடிப்படையில் கிடாவை தூக்கி பார்த்து விலை பேசுவார்கள். அதில் சற்று ஏறக்குறைய விலை நிர்ணயம் ஆகும். ஆனால் நேற்று முன்தினம் இப்படி கிடாக்களை தூக்கி பார்க்க கூட விடவில்லை. வந்த வேகத்தில் கிடாக்கள் சொன்ன விலைக்கு விற்று தீர்ந்தது.

மட்டன் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. முசிறி, தா.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வழக்கமாக கிலோ 550க்கு விற்கப்பட்ட மட்டன் நேற்று ரூ.600ஆக உயர்ந்தது. மணப்பாறை பகுதியில் நேற்று ரூ.650க்கு விற்பனையானது. வழக்கமாக வறட்சி காலத்தில்தான் கிடாக்கள் கிடைக்காது. கிடாக்கள் எடையும் இருக்காது. அப்போது விலை சற்று உயர்வாக இருக்கும். இப்போது தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து செழிப்பாக உள்ள நிலையில் ஆட்டு கிடாக்கள் விலை ஏறுவது ஏன் என்பது குறித்து மணப்பாறை சந்தைக்கு வந்த வியாபாரி ஆறுமுகம் கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் நடப்பதால் ஆட்டு கிடாக்கள் விலை உயர்ந்து உள்ளது.

இந்த தேர்தல் முடியும் வரை கிடாக்கள் விலை அதிகமாகத்தான் இருக்கும். அதன் பிறகும் இனி குறையாது. தேர்தல் வந்ததால் ஆடுகள் வளர்ப்போருக்கு நல்ல விலை கிடைத்துள்ளது. சந்தையும் களைகட்டி காணப்பட்டது. வந்த ஆடுகள் அனைத்தும் உடனுக்குடன் விற்று தீர்ந்ததால் அனைவரும் மகிழ்ச்சியுடன் சென்றனர் என்றார்.

Tags : Manapaarai ,Local body Election,Goat sale ,Market, mutton price
× RELATED திருமணம் செய்யாமல் சேர்ந்து...