×

மணமேல்குடி ஒன்றிய அலுவலகத்தில் திமுக-அதிமுக கடும் மோதல் நாற்காலிகள் வீச்சால் மூடல்

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு வாபஸ் மற்றும் சின்னம் ஒதுக்குதல் நடைபெற்றது. இதில் மஞ்சக்குடி கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் மணமேல்குடி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பரணிகார்த்திகேயன் போட்டியிடுகிறார். இவரும் அதிமுகவை சேர்ந்த நாராயணன் என்பவரும் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தவர்களாம். இந்நிலையில் தன் நண்பருக்கு ஆதரவாக  நாராயணன் தனது வேட்பு மனுவை திரும்ப பெற முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக  நேற்று மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார். வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுக்கும்போது அங்கு நின்று கொண்டிருந்த மணமேல்குடி அதிமுக ஒன்றிய செயலாளர் துரைமாணிக்கம், நாராயணன் வைத்திருந்த வாபஸ் வேட்பு மனுவை கிழித்து போட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்த அங்கு இருந்த திமுக தரப்பினரும், அதிமுக தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். மேலும் நாற்காலிகளை உடைத்து தூக்கி வீசி தாக்கி கொண்டனர். இதனால் அறையிலிருந்த அலுவலர்கள் அனைவரும் சிதறியடித்து ஓடினர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கோட்டைபட்டிணம் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவராமன், இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் அனைவரையும் வெளியேற்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இழுத்து மூடினர். இந்த தாக்குதலில் அதிமுக ஒன்றிய செயலாளர் துரைமாணிக்கம், அதிமுக நிர்வாகிகள் உலகநாதன், செந்தில்முருகன், முத்துராமன் மற்றும் திமுக நிர்வாகிகள் மகேஸ்வரன், குமார், சுப்பிரமணி மற்றும் சுயேச்சை வேட்பாளர் இளமாறன் ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்கு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலால் சுமார் 2 மணிநேரம் அலுவலக வேலை, சின்னம் ஒதுக்குதல் பணிகள் நடைபெறவில்லை. மீண்டும் வேறு அறையில் வைத்து சின்னம் ஒதுக்குதல் வேலைகள் இரவு வரை நடைபெற்றது.மேலும் தகராறு நடந்த அறையில் உள்ள மீது சிசி டிவி கேமரா பதிவை வைத்து வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் மணமேல்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : AIADMK ,clash ,DMK ,union office ,Manamelgudi , Manamelgudi, DMK, AIADMK
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...