×

சுயேச்சையாக மனைவி வேட்புமனு: பாஜ நிர்வாகி காரில் திடீர் தீ

வந்தவாசி: வந்தவாசி அருகே உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட பாஜ நிர்வாகியின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரது கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, தெள்ளார் ஒன்றியம் அகரகொரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சாய்பாபா(40). திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜ பொருளாதார பிரிவு தலைவராக உள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த இவருக்கு சொந்தமான கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சாய்பாபா உடனடியாக தெள்ளார் போலீசாருக்கும், வந்தவாசி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, வேலூர் தடயவியல் உதவி இயக்குநர் விஜய் தலைமையிலான நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். வரும் 27ம் தேதி நடைபெற உள்ள  ஊரக உள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட 12வது வார்டு ஒன்றிய  கவுன்சிலர் பதவியை பாஜவுக்கு ஒதுக்கும்படி அதிமுக கூட்டணியிடம்  கேட்டிருந்தார். ஆனால், 8வது வார்டான வெடால் ஒன்றிய கவுன்சிலர் பதவியை பாஜவுக்கு ஒதுக்கியுள்ளனர். இதனால் சாய்பாபா தனது மனைவி புவனேஸ்வரியை 12வது வார்டில் சுயேச்சையாக நிறுத்தி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல்,  இந்த 12வது வார்டில் அதிமுக ஒன்றிய செயலாளர் தங்கராஜ், திமுக ஒன்றிய  செயலாளர் ராதா, அதிமுக போட்டி வேட்பாளராக பாண்டுரங்கன் உள்ளிட்ட 14 பேர்  மனுதாக்கல் செய்துள்ளனர். போட்டி கடினமாக உள்ளதால் இந்த வார்டு  அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில், சாய்பாபா கார் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தேர்தல் போட்டி காரணமா? அல்லது முன்விரோதம் காரணமாக யாரேனும் தீ வைத்தார்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் பாஜ நிர்வாகியின் கார் திடீரென எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : fire ,Baja ,wife nominee ,Independent , Independent, wife nominee, Baja admin, car, sudden fire
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா