×

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கைது: மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் கண்டனம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. கர்நாடாக மாநிலம் பெங்களூரு மாவட்டம் டவுன்ஹால் பகுதியில் காலையில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டம் நடைபெறவுள்ளதை அறிந்த காவல்துறையினர் நேற்றே இந்தப் பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இந்தநிலையில், இன்று காலையில் நடைபெற்ற போராட்டத்தில் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கலந்துகொண்டார். அப்போது அவரைத் தடுத்த போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹாவை பெங்களூரு போலிஸார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; ராமச் சந்திர குஹா மற்றும் யோகேந்திர யாதவ் எந்த காவல்துறையினர் கைது செய்ததற்கு நான் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். டெல்லியில் தொலைதொடர்பு சேவையை முடக்கியிருப்பதும் கண்டனத்துக்குரியது. எப்போது எதிர்ப்புக் குரல்கள் ஒடுக்கப்படுகிறதோ, அப்போது ஜனநாயகத்தை சர்வாதிகாரம் நிரப்பும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கூறியதாவது; ராமச்சந்திர குஹா மற்றும் யோகேந்திர யாதவ் உள்ளிட்டவர்களை கைது செய்வதன் மூலம் சத்தியா கிரக போராட்டத்தை எரியூட்டும் அரசின் முட்டாள் தனமான செயலை நான் கைத்தட்டி வரவேற்கிறேன். அதேநேரத்தில் அவர்களுடனை பாதுகாப்பின் மீது நான் அக்கறைக் கொள்கிறேன். இந்தியா அவர்களுடன் இணைந்து நிற்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Ramachandra Guha ,Arrest ,protest ,Kamal Haasan ,civil rights protest ,MK Stalin , Citizenship Amendment Act, Historian, Ramachandra Guha, Arrest, MK Stalin, Kamal Haasan, Condemnation
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...