×

அமெரிக்காவில் சுவாரஸ்யம்: டெக்சாஸ் நகர மேயராக 7 மாத குழந்தை வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் பதவியேற்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் நகர மேயராக 7 மாத குழந்தை பதவியேற்றுக்கொண்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒயிட்ஹால் நகரின் தீயணைப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அந்த நகரின் கவுரவ மேயர் பதவி ஏலம் விடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஏலம் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. அதில் 7 மாத குழந்தையான வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் வெற்றி பெற்றார்.

இதனைத்தொடர்ந்து மேயர் சார்லி’ என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வொயிட்ஹாலில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு தன்னுடைய கவுரவ மேயர் பதவியை ஏற்றுக்கொண்டார். 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட பதவியேற்கும் விழாவில் சார்லஸ் மெக்மில்லன் மேயராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்ற மேயரை கையில் தூக்கி கொஞ்சுவதற்கு அங்கிருந்தவர்கள் ஆர்வமாக இருந்தனர்.

பதவி ஏற்பின்போது மேயர் சார்லி சார்பாக பிராங்க் என்பவர் பேசினார். அப்போது வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் ஆகிய நான் மேயர் பதவியை மனதார ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு உண்மையாகவும் இருப்பேன். விளையாட்டு மைதானத்தில் அனைவரிடமும், கனிவாகவும் அன்புடனும் இருப்பேன். தீயணைப்பு துறை வீரர்களுக்கு பிஸ்கட் எடுத்து செல்வேன். எனது நாட்டை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பேன். அதற்காக அம்மாவும், அப்பாவும் உதவி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

பதவியேற்புக்குப் பின் சார்லஸின் வளர்ப்புத் தாயிடம்; மேயர் குடியரசு கட்சி ஆதரவாளரா? அல்லது ஜனநாயக கட்சி ஆதரவாளரா? என நகைச்சுவையாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தாய் நான்சி, மேயர் சார்லஸ் அனைவரையும் நேசிப்பார். அனைவரின் ஒற்றுமைக்காகவும் உழைப்பார். அமெரிக்காவை மீண்டும் கனிவான நாடாக உருவாக்குவதே அவரின் அரசியல் நோக்கம் என தெரிவித்தார்.

Tags : city mayor ,Texas ,United States ,William Charles McMillan , William Charles McMillan, Mayor of Texas, USA
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்