×

பாணாவரம் அருகே ரங்காபுரம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் பாதியில் நிற்கும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி

சோளிங்கர்: பாணாவரம் அடுத்த ரங்காபுரம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே உள்ள ரங்காபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1957ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இப்பள்ளியில் ரங்காபுரம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள 5 கிராமத்தை சேர்ந்த 80 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் பின்புறம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் முட்செடிகள் மண்டி புதர் காடுகளாக காட்சியளிக்கிறது. இந்த முட்புதர்களிலிருந்து அடிக்கடி பாம்புகள், விஷ பூச்சிகள் பள்ளிக்குள் வருவதால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பயப்பட்டனர்.

இதையடுத்து சுற்றுச்சுவர் அமைக்க ரூ.9.60 லட்சமும், சமையலறை ரூ.2.50 லட்சத்திலும், கழிவறை ரூ.2.25 லட்சத்திலும் கடந்த ஒரு  ஆண்டுக்கு முன் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தலைமையாசிரியர் பாஸ்கர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தெய்வானைகுமார், மேலாண்மை குழு தலைவர் சையத் மொய்தீன், உறுப்பினர் மாலா மாரியப்பன் ஆகியோர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் கடந்த மாதம் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதில், பள்ளியின் பின்புறத்தில் பள்ளிக்கு சொந்தமான இடத்தை ஒட்டி தனியார் நிலங்கள் உள்ளது. அவர்களின் எதிர்ப்பால் அந்த பணி நிறுத்தப்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக ஊராட்சி செயலர் பிச்சாண்டி செயல்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் பள்ளியின் முன் மற்றும் பக்க வாட்டு சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்ட பின்னரும் கூட,  பள்ளியின் பின்புறத்தில் சுற்றுச்சுவர் கட்டவில்லை. பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே பள்ளியின் பின்புற சுற்றுச்சுவரை உடனடியாக கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து காவேரிப்பாக்கம் பிடிஓ ரவி கூறுகையில், ‘இதுகுறித்து எனக்கு புகார் கிடைத்தது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. விரைவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை முடித்து சமையலறை, கழிவறை கட்டிடங்கள் கட்டப்படும்’ என்றார்.

Tags : station ,village ,Panavaram , Primary
× RELATED உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து...