×

முஷாரப்புக்கு மரண தண்டனையா? பாகிஸ்தான் ராணுவம் கொந்தளிப்பு: பிரதமர் இம்ரான் பீதி, அவசர ஆலோசனை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டதற்கு ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இப்பிரச்னை குறித்து தனது கட்சியின் மூத்த தலைவர்களுடன் பிரதமர் இம்ரான்கான் அவசர ஆலோசனை நடத்தினார்.  பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு, தேசத் துரோக வழக்கில் மரண தண்டனை விதித்து பெஷாவர் உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  நீதிமன்ற உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர், ‘‘முன்னாள் ராணுவ தளபதியாக, முப்படை தலைவராக, நாட்டின் அதிபராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்கு சேவை செய்து, பல போர்களில் ஈடுபட்டவர் நிச்சயமாக தேசத் துரோகியாக இருக்க முடியாது. இந்த முடிவு சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல், தன்னிச்சையாக அவசர கதியில் எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசியல் சாசனப்படி நீதி வழங்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவம் விரும்புகிறது,’’ என்றார்.

முஷாரப்புக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டபோது, பிரதமர் இம்ரான் கான் ஜெனிவாவில் நடந்த உலக அகதி அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். தீர்ப்பு குறித்து கருத்து கூறிய பிரதமர் இம்ரானின் உதவியாளர் பிர்தோஸ் ஆஷிக் அவான், ‘ராணுவத்தின் கருத்தை அறிந்த பின் இது குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்படும்,’ என கூறினார். அவரும், அட்டர்ஜி ஜெனரல் அன்வர் மன்சூரும் நேற்று முன்தினம் இரவு அளித்த பேட்டியில், ‘‘இந்த தீர்ப்பு நியாயம் அற்றது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும்,’’ என்றனர். இந்நிலையில், தனது தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் அவசர கூட்டத்தை பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் நேற்று கூட்டினார். அதில், முஷாரப் மீதான தீர்ப்பு குறித்து கட்சியின் மூத்த தலைவர்களின் கருத்தை கேட்டறிந்தார். இம்ரான்கான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, முஷாரப் மீது தேசத் துரோக வழக்கு விசாரணை நடத்துவதற்கு  ஆதரவாக கருத்து தெரிவித்தார். அதை சுட்டிக்காட்டும் வகையில், அவரது பழைய பேட்டிகள் பாகிஸ்தான் டிவி.க்களில் நேற்று பலமுறை ஒளிபரப்பப்பட்டது.


Tags : Imran ,Musharraf ,Pakistan Army , Former Pakistani President Musharraf and Prime Minister Imran Panic have been sentenced to death
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு