×

தமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

புதுடெல்லி: தமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான சாகித்ய அகாடமியால், நாவல், சிறுகதை, நாடகம் போன்ற இலக்கிய படைப்புகளுக்கு நாட்டிலேயே மிக உயரிய விருதான சாகித்ய அகாடமி விருதை வழங்கி வருகிறது. 1955ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த படைப்பாளிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, தமிழில் எழுத்தாளர் சோ.தர்மனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய ‘சூல்’ என்ற நாவலுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே இவர்,  “கூகை” என்ற நாவலுக்காக தமிழக அரசின் விருதை பெற்றுள்ளார்.  ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட 7 நூல்களை சோ.தர்மன் எழுதியுள்ளார்.


சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வான எழுத்தாளர் தர்மனின் இயற்பெயர் தர்மராஜ். 66 வயதான இவர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உருளைக்குடி கிராமத்தை சேர்ந்தவர். எழுத்தாளர் தர்மன் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 1947ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தபோது, 39 ஆயிரத்து 640 கண்மாய்கள் இருந்தன. அந்த கண்மாய்களின் தற்போதைய நிலை என்ன என்பதே ‘சூல்’ நாவலின் மையக்கரு. உலகில் இன்றைக்கு முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது தண்ணீர்தான். விவசாயம் நலிவுறுவதற்கு காரணமே கண்மாய்களை மராமத்து பார்க்காததும், மண் எடுக்க விடாததும்தான் என அதில் எழுதியுள்ளேன். தற்போது சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

சசிதரூருக்கு விருது
சோ.தர்மன் உட்பட 23 எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ‘இருளின் சகாப்தம்’ என்ற ஆங்கில நாவலுக்காக காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான சசிதரூருக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது. டெல்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி பரிசளிப்பு விழா நடத்தப்பட உள்ளது. இதில் விருதுடன் ₹1 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும். மேலும், முன்னாள் அசாம் முதல்வரும், ஏஜிபி கட்சியின் மூத்த தலைவருமான பிரபுல்லா குமார் மஹந்தாவின் மனைவி ஜெய கோஸ்வாமிக்கும் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அசாமில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போராடும் மக்கள் கொல்லப்படும் சமயத்தில், இந்த விருது தனக்கு மகிழ்ச்சி தரவில்லை என ஜெய கூறியுள்ளார்.



Tags : So ,Tamil ,Dharman ,Dharman Sahitya Academy Award , Tamil writer, So. Thurman, Sagitya Academy Award
× RELATED சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன்; அரையிறுதியில் ஜாலி – காயத்ரி