×

டாடா நிறுவன தலைவராக சைரஸ் மிஸ்திரி மீண்டும் நியமிக்க தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: டாடா நிறுவன தலைவராக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் என கூறியுள்ள தீர்ப்பாயம், சைரஸ் மிஸ்திரியை மீண்டும் டாடா நிறுவன தலைவராக நியமிக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உப்பு முதல் சாப்ட்வேர் தொழில் வரை ஈடுபட்டுள்ள டாடா நிறுவனத்தின் 6வது தலைவராக சைரஸ் மிஸ்திரி கடந்த 2012ம் ஆண்டு பொறுப்பேற்றார். கடந்த 2016ம் ஆண்டு அவர் நீக்கப்பட்டு, சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். டாடா சன்ஸ் நிறுவனத்தில் சைரஸ் மிஸ்திரி குடும்பத்துக்கு 18.4 சதவீத பங்குகள் உள்ளன. இந்நிலையில் தான் நீக்கப்பட்டதற்கு எதிராக தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம்(என்சிஎல்டி)யில் சைரஸ் மிஸ்திரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தீர்ப்பாயம் கடந்த 2017ம் ஆண்டு நிராகரித்தது. இதை எதிர்த்து மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் சைரஸ் மிஸ்திரி மனு செய்தார்.  

இதை விசாரித்து வந்த நீதிபதி எஸ்.ஜே.முகபாத்யாய் தலைமையிலான இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று தனது தீர்ப்பை வழங்கியது. அதில் டாடா நிறுவன தலைவராக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டது சட்ட விரோதம் என்றும், சைரஸ் மிஸ்திரியை ஒரு மாதத்துக்கும் மீண்டும் தலைவராக நியமிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.  பொது நிறுவனமாக இருந்ததை தனியார் நிறுவனமாக டாடா சன்ஸ் மாற்றியது சட்டத்துக்கு விரோதமானது என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய டாடா நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Tata ,Cyrus Mistry ,company ,Tata Group ,president , Tata Group President, Cyrus Mistry
× RELATED சொல்லிட்டாங்க…