×

குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் முதல்வர் வீடு நோக்கி பேரணி: பிரதமர், அமித்ஷா, புகைப்படங்களை எரித்ததால் பரபரப்பு

சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அப்போது, அனைவரும் முதல்வர் வீட்டை நோக்கி பேரணியாக சென்றதால் பட்டினப்பாக்கத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றன. அந்த வகையில், முஸ்லிம் அமைப்புகளான மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டை  முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் வீடு உள்ளிட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் திட்டமிட்டப்படி நேற்று மாலை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஒன்று கூடினர். பிறகு அனைவரும்  கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டை நோக்கி  பதாகைகளுடன் பேரணியாக சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இணை கமிஷனர் சுதாகர் தலைமையிலான போலீசார், பேரணியாக சென்ற அனைவரையும் பட்டினப்பாக்கம் சிக்னல் அருகே தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் பேரணியாக வந்த முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேரணியாக வந்த அனைவரும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் புகைப்படங்களை தீ வைத்து கொளுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அனைவரும் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பட்டினப்பாக்கம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

Tags : organizations ,residence ,Chief Minister , Citizenship Amendment, condemning, marching towards , home of the Chief Minister , Muslim organizations
× RELATED காஷ்மீரில் 2 அமைப்புகளுக்கு 5 ஆண்டு தடை உறுதி