×

பாஜ மற்றும் அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் வரும் 23ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணி: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: மத்திய பாஜ மற்றும் அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 23ம் தேதி சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணி நடத்துவது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் காலை 10.40 மணி தொடங்கி 12.40 மணி வரை நடைபெற்றது. இதில் திமுக உள்ளிட்ட 11 கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். திமுக சார்பில் பொருளாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்,பாரதி, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, மதிமுக சார்பில் வைகோ, மல்லை சத்யா, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் தங்கபாலு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொகீதின், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் அப்துல் சமது, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்பி, திராவிட கழக துணை தலைவர் கலிபூங்குன்றன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விபரம் வருமாறு: நாட்டின் முக்கியப் பிரச்னைகளிலிருந்து, மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும், ஆர்.எஸ்.எஸ். வகுத்தளித்துள்ள மதரீதியான அடிப்படைவாதக் கொள்கைக்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையிலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜ அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டத் திருத்தத்தால் முஸ்லிம் சிறுபான்மை மக்களும், ஈழத்தமிழர்களும் குடியுரிமை பெற இயலாமல், பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல் சக்திகள் அனைத்தும், நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், அதனை நிராகரித்து, தங்கள் கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்தன. போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. டெல்லி ஜாமியா - உத்திரபிரதேச அலிகார் பல்கலைக் கழகங்களில் போராடிய மாணவ - மாணவியர் மீது காவல்துறையினர் கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டதைக் கண்டு நாடே பதறுகிறது. காவல்துறைக்கும், ஏவிவிட்ட மத்திய அரசுக்கும் அனைத்து கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மாணவர்களின் அறவழிப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்க இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களைத் தவிர்த்து, இந்துக்கள் உள்ளிட்ட பிற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் இந்த திருத்தச் சட்டம், இலங்கையிலிருந்து குடியேறியுள்ள ஈழத்தமிழர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதென்பது, பாஜ அரசின் மதவாதம் மட்டுமல்ல, அப்பட்டமான தமிழின விரோதப் போக்குமாகும். தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்ற ஈழத்தமிழர்களைப் பாதிக்கும் இந்த திருத்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டிய நிலையில், அதனை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அதிமுக ஆதரித்து வாக்களித்து நிறைவேற ஒத்துழைத்திருப்பது, ஈழத்தமிழர்களுக்கு செய்திருக்கும் பச்சைத் துரோகம் என்பதை சரித்திரம் மறக்காது, மன்னிக்காது. மாநிலங்களவையில் இந்த சட்ட மசோதா நிறைவேறுவதற்கு அதிமுகவின் 11 உறுப்பினர்களும், பாமகவின் ஒரு உறுப்பினரும் அளித்த வாக்குகள் தான் காரணம் என்கிறபோது, பாஜ அரசின் கைப்பாவையாக அடிமை அதிமுக கூட்டணி செயல்பட்டு வருவது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

உலகளாவிய அமைப்புகள் பலவும் மற்றும் 1067க்கு மேற்பட்ட உலகப் புகழ் பெற்ற அறிவியலாளர்களும், இந்த மதவாத சட்டத் திருத்தத்திற்கு கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர். மதவாத மற்றும் இனவாதக் கண்ணோட்டத்துடனும், ஈழத்தமிழர்களைப் புறக்கணித்திடும் வகையிலும் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் கடுமையாகக் கண்டிப்பதுடன், நாட்டில் முதலில் அமைதி நிலவ வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன், அதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்து நாட்டின் அமைதியைச் சீர்குலைத்து வரும் மத்திய பாஜ அரசுக்கும், அதன் திட்டத்தின்படியே செயல்பட்டு, ஈழத்தமிழர்களுக்கும் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் துரோகம் இழைத்த மாநில அதிமுக அரசுக்கும் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில், வரும் 23ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி அளவில், சென்னையில் ‘குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி நடத்திடுவது என அனைத்து கட்சிகளின் இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Citizenship amendment rally ,Chennai ,government ,AIADMK ,BJP ,MK Stalin ,Anti-Migration Rally , Citizenship Amendment, Anti-Migration Rally , Chennai, led by MK Stalin
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்