×

சீராய்வு மனு தள்ளுபடி நிர்பயா வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை உறுதியானது : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: நிர்பயா பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி அக்சய் குமார் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அவரது தூக்கு தண்டனையை மீண்டும் உறுதி செய்து நேற்று தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் அதில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் சிகிச்சை பலனின்றி அந்த பெண் பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டார். குற்றவாளிகளில் ஒருவர் 18 வயதுக்கு கீழானவர். இதனால் அவருக்கு அதிகபட்ச தண்டனையாக சிறார் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அந்த தண்டனை முடிந்து 2015ல் அந்த நபர் விடுதலையானார். தற்போது அவர் மத்திய அரசு கண்காணிப்பில் இருந்து வருகிறார். மீதமுள்ள முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் ஆகிய நால்வரில் அக்‌ஷய் குமார் தவிர மற்ற 3 பேர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதன் பின்னர் நான்காவது குற்றவாளியான அக்சய் குமார் சிங் மட்டும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், “தூக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது வழக்கில் இருந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே திடீரென விலகியதோடு, இது தொடர்பான மனுவை நீதிமன்றத்தின் புதிய அமர்வு விசாரிக்கும் என உத்தரவிட்டார். இந்த நிலையில் சீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண் மற்றும் போபன்னா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வாதங்களை முன்வைக்க சுமார் 30 நிமிடம் நீதிபதிகள் அனுமதி வழங்கினர். இதையடுத்து வழக்கறிஞர் ஏ.பி.சிங் வாதாடியதாவது: நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான ராம் சிங்கின் தற்கொலை குறித்து இதில் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளே புத்தகங்களை எழுதியுள்ளனர். மரண தண்டனை விதிப்பது என்பது நமது கலாசாரத்தை கெடுப்பது போன்றதாகும். இந்த விவகாரத்தில் வெளிநாடுகளை ஒப்பிட்டு பார்க்கக் கூடாது. மேலும் நாட்டின் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியை கொலை செய்தவர்களுக்கு கூட தூக்கு தண்டனை விதிக்கப்படவில்லை. எங்களது தரப்பில் தாக்கல் செய்த எந்த மனுவையும் நீதிமன்றங்கள் முறையாக விசாரிக்காமல் தள்ளுபடி செய்து விட்டது. மேலும் நிர்பயா விவகாரம் என்பது அரசியல் ஆதாயத்திற்காக அவரச கதியில் விசாரிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கனவே டெல்லியில் குடிநீர் மற்றும் காற்று மாசு அதிகரித்து மக்களின் ஆயுள்காலம் என்பது குறைந்துவிட்டது. இதுபோன்ற சூழலில் தூக்கு தண்டனை என்பது தேவையற்றது. அதனால் அதனை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து போலீசார் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வாதத்தில், “நிர்பயா விவகாரம் என்பது கடவுளுக்கே கண்ணீர் வரவழைக்கக்கூடிய சம்பவம். அதனால் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி அசோக் பூஷண், ‘‘நீதிமன்ற விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் அதில் சந்தேகத்தை உள்ளாக்குவது போன்று புத்தகம் வெளியிடுவது என்பது ஆபத்தானதாகும்’’ என தெரிவித்தார். இதையடுத்து வாதங்கள் முடிவடைந்ததாக தெரிவித்த நீதிபதிகள் தீர்ப்பை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர். மதியம் ஒரு மணிக்கு நீதிபதிகள் மூன்று பேரும் விசாரணை அறைக்கு வந்தனர். இதில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி போபன்னா வாசித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த வழக்கை பொருத்தமட்டில் நீதிமன்றம் தெளிவாக விசாரித்த பின்னர் தான் தீர்ப்பு வழங்கியது. குறிப்பாக கடந்த 2017ம் ஆண்டு வழங்கப்பட்ட உத்தரவில் எந்த ஆய்வும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. அதனால் குற்றவாளி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.

கருணை வேண்டுமெனில் ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுக்க சட்ட விதிகளின் அடிப்படையில் மனுதாரருக்கு நீதிமன்றம் ஒரு வாரம் கால அவகாசம் வழங்குகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் குற்றவாளி அக்சய் குமார் சிங்கின் தூக்கு தண்டனை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, குற்றவாளிக்கு உடனடியாக தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜனவரி 7ம் தேதிக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய, மாநில அரசுக்கு நோட்டீஸ்

இதற்கிடையே, பெண்களுக்கு எதிரான கிரிமினல் குற்றங்களை விசாரிக்கும் நீதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், அது தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி நேற்று உத்தரவிட்டதோடு, வழக்கு வரும் பிப்ரவரி 7ம் தேதி விரிவாக விசாரிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

உடனடியாக தூக்கிலிட வேண்டும்: மாலிவால்

நிர்பயா பலாத்கார வழக்கு குற்றவாளியின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு டெல்லி மாநில மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவிக்கையில், “7 ஆண்டுகளுக்குப் பிறகு, நிர்பயாவுக்கு நீதி கிடைப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது. குற்றவாளியின் சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்போது பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் நான்கு கொலையாளிகளின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவையும் உடனடியாக பிறப்பிக்கும் என்று நம்புகிறேன். அந்த நான்கு கொலைகாரர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

நிர்பயாவின் தாயார் வரவேற்பு

அக்‌சய் குமாரின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை நிர்பயாவின் தாய் வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “தீர்ப்பு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டைனயை நிறைவேற்றும் உத்தரவு பிறப்பிப்பது தொடர்பான மனு, பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்என நம்புகிறோம்” என்றார்.

கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் புது உத்தரவு

நிர்பயா பலாத்கார கொலை வழக்கில் தூக்கு தண்டனை குற்றவாளிகள் 4 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு சமர்ப்பித்துள்ளனரா, இல்லையா என்பது பற்றி அவர்களிடமிருந்து பதிலை பெற்று தெரிவிக்குமாறு திகார் சிறை நிர்வாகத்திற்கு கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கக் கோரி டெல்லி மாநில அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் கூடுதல் அமர்வு நீதிபதி சதீஷ்குமார் அரோரா, உச்ச நீதிமன்ற உத்தரவின் நகலுக்காகக் காத்திருப்பதாகக் கூறி, விசாரணையை வரும் ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags : Supreme Court , Supreme Court upholds ,verdict, guilty verdict , Nirbhaya case
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...