×

இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை பெற்றுத்தர அதிமுக தொடர்ந்து வலியுறுத்தும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஓமலூர்: இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தர அதிமுக தொடர்ந்து வலியுறுத்தும் என்று சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலத்ைத அடுத்த ஓமலூரில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வாழ்கின்ற எந்த மதத்தினருக்கும்  பாதிப்பு இல்லை என்று பிரதமரும், உள்துறை அமைச்சரும் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். இலங்கை தமிழர்களை பொறுத்தவரை, 2016 தேர்தல் முடிந்தவுடன் முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை சந்தித்து, அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க  கோரிக்கை வைத்தார். அவரது மறைவிற்குப் பிறகு, நானும் பிரதமரை சந்தித்து வலியுறுத்தினேன். நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தியபோது, அதிமுக சார்பில் பேசிய  மேலவை உறுப்பினர்களும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் எதிர்க்கட்சிகள் பொய்யான செய்தியை பரப்புகிறார்கள்.

எங்கள் கட்சியை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக பேசியிருப்பது குறித்து கேட்கிறார்கள். அவர் கொறடாவிற்குத்தான் கட்டுப்படுவார். கொறடாவை மீறி செயல்பட்டால் அவர் பதவி இழக்க நேரிடும் என்பதுதான் முறை. ஆனால், ஏதோவொரு வார்த்தையை வைத்துக் கொண்டு அவர், எதிர்த்ததாக கூறுகின்றனர். அவரிடம் நேரில் கேட்டால் மட்டுமே எங்களுக்கு விளக்கம் தெரியும். இது கட்சியின் சொந்தப் பிரச்னை. இலங்கை தமிழருக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுத்தருவதற்கு அதிமுக தொடர்ந்து வலியுறுத்தும். அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் 107 அகதி முகாம்கள் உள்ளது. 25 மாவட்டங்களில் 59,714 பேர் வசிக்கின்றனர். மேலும், 34,355 பேர் வெளியில் வசிக்கிறார்கள். தமிழக மக்களுக்கு கிடைக்கும் அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளும் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக கூட்டணியில் உள்ள பா.ம.க., பா.ஜ.க. தே.மு.தி.க.வினர் எதிராகப் போட்டியிடவில்லை. வாபஸ் பெறுவதற்கு நேரமுள்ளது. எங்களுடைய கூட்டணி ஒருமித்தக் கருத்தோடு தேர்தலை சந்திக்கும். எதிர்க்கட்சிகள் எப்படியாவது தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டுள்ளனர்.  ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கிறது. இவ்வாறு எடப்பாடி கூறினார்.

Tags : AIADMK ,Edappadi Palanisamy ,Tamils ,Sri Lankan ,Sri Lankan Tamils , Sri Lankan Tamils, Dual Rights, Right to Information, AIADMK
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!