×

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் நாளை இரவுடன் நிறைவு: ஆருத்ராவுக்கு பின் தீப மை வழங்கப்படும்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, கடந்த 10ம் தேதி 2,668 அடி உயர மலைமீது ஏற்றப்பட்ட மகாதீபம், 11 நாட்களுக்கு பிறகு நாளை இரவுடன் நிறைவடைகிறது. அதைத்தொடர்ந்து, ஆருத்ரா தரிசனத்துக்குப்பின் தீபச்சுடர் பிரசாதம் (தீப மை) பக்தர்களுக்கு வழங்கப்படும். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்ற விழா, கடந்த 10ம் தேதி மகா தீப பெருவிழாவுடன் நிறைவடைந்தது. அதையொட்டி, அன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது. இறைவன் திருவடிவான அண்ணாமலை மீது ஏற்றப்படும் மகா தீபம், தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நெய், திரி ஆகியவை மலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, தினமும் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டு
வருகிறது. மகாதீபத்தன்று நேரில் வந்து தரிசிக்க இயலாத பக்தர்கள், மகாதீபம் ஏற்றப்படும் 11 நாட்களில் திருவண்ணாமலைக்கு வந்து தீபத்தை தரிசிப்பது வழக்கம்.

அதன்படி, கடந்த ஒரு வாரமாக அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், மலைமீது ஏற்றப்பட்ட மகாதீபம், நாளை (வெள்ளி) இரவுடன் நிறைவடைகிறது. தொடர்ந்து, நாளை மறுதினம் காலை மகாதீப கொப்பரை, மலை உச்சியில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டு வரப்படும். பின்னர், அடுத்த மாதம் 10ம் தேதி நடைெபறும் ஆருத்ரா தரிசனத்தன்று, தீபச்சுடர் பிரசாதம் (தீப மை), அண்ணாமலையார் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு அணிவிக்கப்படும். பின்னர், நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு தீபச்சுடர் பிரசாதம் கோயில் நிர்வாகம் சார்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Maha Deepam ,Thiruvannamalai , Thiruvannamalai, Maha Deepam, tomorrow night, completed
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...