×

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து கவர்னர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் போராட்டம்: பாரதியார் பல்கலையில் 22 பேர் கைது

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கவர்னர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர். நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சியினர், மாணவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடந்து வருகிறது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இந்த பட்டமளிப்பு விழாவில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்க இருந்தார். கவர்னர்  வருகையையொட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வந்தது.

இதனைதொடர்ந்து பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயில் மூடப்பட்டது. பட்டமளிப்பு விழாவுக்கு வந்த பெற்றோர், பல்கலை வளாகத்தில் இருந்த புல்வெளியில் அமர்ந்து இருந்தனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென மாணவ, மாணவிகள் கவர்னர் வருகையை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் தடையை மீறி மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் மையப்பகுதியில் நின்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதனைதொடர்ந்து பேரூர் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார், பெண்கள் உள்பட 22 பேரை குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதுகுறித்து கைதான மாணவி பூர்ணிமா கூறுகையில், “குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் மீது காவல் துறையினர் நடத்தி வரும் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்” என்றார்.

அமைச்சர் கையால் பட்டம் வாங்க மறுத்த மாணவர்கள்
கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை தமிழக கவர்னர் மற்றும் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். இதில், மூன்று பேருக்கு ஆய்வியல் நிறைஞர் பட்டம், பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த 126 மாணவர்களுக்கு மட்டும் பட்டங்களை கவர்னர் வழங்கினார். பின்னர், தேசிய கீதம் பாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து கவர்னர் புறப்பட்டு சென்றார். இதனால், முனைவர் பட்டம் பெற காத்திருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பல்கலைக்கழக நிர்வாகம் இனி பட்டங்களை அமைச்சர் வழங்குவார் என தெரிவித்தனர். அமைச்சர் கையால் பட்டங்களை வாங்க மாட்டோம் என மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கவர்னர் கையில்தான் பட்டம் பெற வந்தோம். தேசிய கீதம் பாடி முடித்த பின்பு மீண்டும் எப்படி நிகழ்ச்சியை தொடர முடியும்? என கேள்விகளை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து துணைவேந்தர் காளிராஜ் மாணவர்கள் மத்தியில் பேசினார். பட்டமளிப்பு விழா முடிந்து விட்டது. அமைச்சரிடம் பட்டங்களை விருப்பம் உள்ளவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. பல மாணவர்கள் பட்டம் பெற மறுத்ததால் விழா அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Bharathiar University Citizenship ,graduation ceremony ,governor , Citizenship, protesting the bill, the governor's participation, the graduation ceremony
× RELATED எஸ்.எம்.பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா