×

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: ரூ. 2 கோடி பௌர்ணமி உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா பௌர்ணமி உண்டியல் இன்று காலை திறந்து கணக்கிடப்பட்டது. அதில் உண்டியல் வருவாய் ரூ.2,25,62,155-யும், தங்கம் 292 கிராமும் மற்றும் வெள்ளி 2684 கிராம் இருந்துள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 10-ந் தேதி 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகாதீபம் வருகிற 20-ம் தேதி வரை காட்சி அளிக்கும்.

தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் இறைவனும், இறைவியும் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நாள்தோறும் காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவ சுவாமிகளின் வீதி உலாவும், இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளின் உற்சவ வீதியுலாவும் நடைபெற்றது.

மேலும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வன 7-ம் நாள் உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடந்தது. இந்த ஆண்டு கோவிலில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனை அடுத்து இன்று காலை கார்த்திகை தீபத் திருவிழா பௌர்ணமி உண்டியல் திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டதில் ரூ. 2 கோடி வரையிலான பணமும், தங்கம் 292 கிராமும் மற்றும் வெள்ளி 2684 கிராம் காணிக்கையாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Thiruvannamalai Carnatic Deepath Festival ,moon , Thiruvannamalai ,Carnatic, Rs. 2 crores ,full moon
× RELATED தமிழக – கேரள எல்லையில் கண்ணகி கோயில்...