×

சேலம் அருகே விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைக்க மரங்கள் வெட்டப்பட்டதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை: உறவினர்கள் போராட்டம்


சேலம்: சேலம் அருகே விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைக்க மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. சேலம் மாவட்டம் நங்கவல்லி அருகே பள்ளக்கானூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமமானது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சொந்த தொகுதியான எடப்பாடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் வரும் கிராமமாகும். இந்த கிராமத்தில் வெள்ளைப்பையன் என்பவருக்கு சொந்தமாக சுமார் இரண்டரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் பவர்கிரிட் நிறுவனமானது தற்பொழுது உயர் மின்னழுத்த கோபுரங்களை விளைநிலங்களில் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன்படி திருப்பூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவலக்குண்டி வரை செல்லும் உயர் மின்னழுத்த கோபுரங்களை அமைக்கும் பணியில் வெள்ளைப்பையன் நிலமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, பவர்கிரீட் நிறுவனமானது கடந்த 3 தினங்களுக்கு முன்பு வெள்ளைப்பையனின் விவசாய நிலங்களுக்குள் புகுந்து எந்தவித இழப்பீடும் தராமல் அவருடைய நிலத்தில் இருந்த தென்னை மரங்கள் மற்றும் புளியம்மரங்களை வெட்டியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்ததோடு மட்டுமின்றி மனவேதனை அடைந்த வெள்ளைப்பையன் தனது வீட்டில் இருந்த பூச்சுமருந்தினை அருந்தியுள்ளார். பின்பு மயக்கமடைந்த அவர், உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவமானது அவருடைய உறவினர்கள் மட்டுமின்றி விவசாயிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலை அவருடைய உறவினர்கள் மற்றும் விவசாயிகள் வாங்க மறுத்து வருகின்றனர்.

விவசாயிகளை பொறுத்தவரை உயர் மின்னழுத்த கோபுரங்களை விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்ல கூடாது. அவ்வாறு கொண்டு செல்லும் போது விளைநிலங்கள் பாதிக்கப்படும் என பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து மின்கோபுர நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெள்ளைப்பையனின் மகன் சக்திவேல் என்பவர் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் தனது தந்தை தற்கொலைக்கு மின்கோபுர நிறுவனமே காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags : suicide ,Salem ,farmland ,farm ,Relatives ,farmhouse , Salem, farmland, minicomputer, trees, farmer suicide, relatives struggle
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை