×

கால்நடை பெண் மருத்துவரை கொன்ற அதே பாணியில் 9 பெண்கள் எரித்துக்கொலை!..என்கவுண்டருக்கு முன் அளிக்கப்பட்ட வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்!

ஐதராபாத்: கால்நடை பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற வழக்கில் என்கவுண்டர் செய்யப்பட்ட 4 பேர் கும்பல், அதே பாணியில் 9 பேரை எரித்துக் கொன்றிருப்பதாக போலீசார் கூறும் தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் புறநகர் பகுதியான ஷம்சாபாத்தில், கடந்த மாதம் 27ம் தேதியன்று 26 வயதான பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். பின்னர் அவரது உடல் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைதான முகமது ஆரிஃப், ஜொலு சிவா, சென்னக்கேசவுலு, ஜொலு நவீன் ஆகியோர் கடந்த 6ம் தேதி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இவர்களை சுட்டு வீழ்த்தும் முன்பாக இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட முகமது ஆரிஃப் மற்றும் சென்னகேசவலு ஆகியோர் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல்களை ஐதரபாத் போலீசார் தற்போது கசியவிட்டுள்ளனர். கால்நடை பெண் மருத்துவர் எரித்துக்கொல்லப்பட்ட உடன், அதே பாணியில் எரித்துக்கொல்லப்பட்ட 15 பெண்கள் குறித்த வழக்குகளை ஆராய்ந்ததாக கூறியுள்ளனர். அப்போது, பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த முகது ஆரிஃப் மற்றும் சென்னகேசவுலு அளித்த வாக்குமூலம், திருப்புமுனையாக அமைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு கொடூரன்களும் பெண் மருத்துவரை கொன்ற பாணியில், பாலியல் தொழிலாளர்கள், திருநங்கைகள், பெண்கள் உள்பட 9 பேரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கி, சித்ரவதை செய்து எரித்துக்கொன்றதாக வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் சங்காரெட்டி, ரங்காரெட்டி, மெகபூப் நகர் ஆகிய இடங்களை ஒட்டியுள்ள நெடுஞ்சாலை பகுதியிலும், தெலுங்கானா-கர்நாடகா மாநில எல்லையோர நகர்ப்புற பகுதிகளிலும் இவ்வாறு 9 பேரை அந்த இரண்டு கொடூரன்கள் எரித்துக்கொன்றதை ஒப்புக்கொண்டிருப்பதாக போலீசார் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. என்கவுண்டரில் கொல்லப்பட்ட முகமது ஆரிஃப் மற்றும் சென்னகேசவுலு அகியோரின் செல்போன் தரவுகளை வைத்தும், அவர்களது எண்கள் பதிவாகியுள்ள செல்போன் கோபுரங்களை கொண்டும் 9 பேர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கிற்கு தேவையான ஆதாரங்களை திரட்டி வருவதாகவும், இதற்காக அந்த பகுதிகளிலும் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருவதாகவும் ஐதராபாத் போலீசார் கூறியுள்ளனர்.  


Tags : women ,death ,veterinarian ,doctor ,Telangana ,killers ,rape , Telangana, veterinarian, encounter, confession, Hyderabad police
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ