×

தனுர் மாத உற்சவத்தையொட்டி கரைகண்டீஸ்வரர் பர்வதமலையை கிரிவலம் வந்தார்

கலசபாக்கம்: தனுர் மாத உற்சவத்தையொட்டி கலசபாக்கம் அருகே பிரஹந்த நாயகி சமேத கரை கண்டீஸ்வரர் நேற்று பர்வதமலையை கிரிவலம் வந்தார். மேலும், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர். தென்கையிலாயம் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்தது கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலத்தில் உள்ள பர்வதமலை. இம்மலையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயில் உள்ளது. இம்மலை சுமார் 4,560 அடி உயரம் கொண்டது. சிறப்பு மிக்க பர்வத மலையில் மார்கழி(தனுர்) மாத உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று தனுர் மாத உற்சவம் விமரிசையாக நடந்தது. இதையொட்டி, கோயில்மாதி மங்கலத்தில் உள்ள கரைகண்டீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற மார்கழி மாத உற்சவத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் கடலாடி, பட்டியந்தல், வேடப்புலி, வெள்ளந்தாங்கீஸ்வரர் வடகாளிஅம்மன் கோயில் வழியாக சுமார் 24 கிலோ மீட்டர் கிரிவலம் வந்தனர். நேற்று மதியம் 2 மணி அளவில் பிரஹந்த நாயகி சமேத கரைகண்டீஸ்வரர் பர்வதமலையை கிரிவலம் வந்தார். பர்வதமலையின் உச்சிக்கு பக்தர்கள் ஏறிச் செல்லும்போது, பக்தர்களின் அரோகரா முழக்கம் பர்வதமலையை உலுக்கியது. இன்று 2வது நாளாக சுவாமி ஆதமங்கலம் புதூரில் இருந்து தொடங்கி கிரிவலம் வர உள்ளது. நேற்று கிரிவலம் வந்த பக்தர்களுக்கு வழி நெடுங்கிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக வேலூர், திருவண்ணாமலை, போளூர், ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

மேலும், கிரிவலப் பாதையில்  பக்தர்களின் வசதிக்காக குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தன. அதேபோல வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு தலைமையில் நடமாடும் மருத்துவக்குழுவினர் பக்தர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். கலசபாக்கம் தூய்மை இயக்கத்தின் சார்பில் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கிரிவலம் வந்த பக்தர்களுக்கு குன்னத்தூர் காளியம்மன் கோயில் அருகே அன்னதானம் வழங்கினார். இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, எம்எல்ஏவின் முயற்சியால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறுகிய காலத்தில் செய்து தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Karaikandeesvara Parvathamalai ,occasion ,Kirivalam ,Mountain ,Dhanur , Mountain
× RELATED திருவண்ணாமலையில் காலணி அணிந்து...