×

குடியுரிமை சட்டத்திருத்தத்தால் இந்தியாவில் வாழ்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலம்: குடியுரிமை சட்டத்திருத்தத்தால் இந்தியாவில் வாழ்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளன. இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமிய பல்கலைகழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து, நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் சேலம் மாவட்டம் வீரபாண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி பிரதமர், உள்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளனர்.

குடியுரிமை சட்டத்திருத்தத்தால் இந்தியாவில் வாழ்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எந்த மதத்தினருக்கும் சிக்கல் ஏற்படாது. குடியுரிமை சட்டத்திருத்தத்தால் எந்த பாதிப்புமில்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்துவிட்டது. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தினார். ஜெயலலிதா வலியுறுத்தியதையே நானும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். இந்த கோரிக்கையை நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தினர். கொறடா உத்தரவின்படி தான் அதிமுக எம்பிக்கள் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர், கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட்டு அனைவரும் செயல்படுவார்கள். கட்சிக்கும் ஆட்சிக்கும் மதிப்பளித்து செயல்படக்கூடியவர்கள் அதிமுகவினர், என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டு மக்களுக்கு அரசின் சார்பில் செய்யப்படும் நலத்திட்ட உதவிகள் இலங்கை அகதிகளுக்கும் செய்துத் தரப்படுகிறது என தெரிவித்துள்ளார்.


Tags : India ,Edappadi Palanisamy ,residents ,CM Palaniswamy , Citizenship Amendment, India, CM Palanisamy, AIADMK, Sri Lankan Tamils
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை