×

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம்: போலீசார் விரட்டி அடித்ததால் தஞ்சையில் பரபரப்பு

தஞ்சை: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தஞ்சையில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. டெல்டா மாவட்டத்திலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தஞ்சை மன்னர்சரபோஜி அரசு  கல்லூரி மாணவ, மாணவிகள் 1,000க்கும் மேற்பட்டோர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்தினர். அத்துடன் இந்திய மாணவர் சங்க தலைவர் அரவிந்த்சாமி  உள்ளிட்ட மாணவர்களை கையை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தனர்.

இதனால்  ஆத்திரமடைந்த மாணவர்கள், போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு கல்லூரி  வளாகத்தை விட்டு வெளியே வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.  அப்போது போலீசார்  மாணவர்களை விரட்டி அடித்ததால் மாணவர்கள்  கலைந்து சென்றனர்.
திருவாரூர்:  திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய  பல்கலைக்கழக மாணவர்களும் நேற்றுமுன்தினம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின்  உருவபொம்மையை எரித்து தங்கள்  எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து 20ந்தேதி வரையில் விடுமுறை அளித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டதுடன் உடனடியாக 24 மணி நேரத்திற்குள் மாணவர்கள் விடுதியை விட்டு  வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த  மாணவர்கள், உடனடியாக தங்கள் ஊருக்கு செல்வதற்கு டிக்கெட் கிடைக்காததால்  விடுதியை விட்டு வெளியேற முடியாது என நள்ளிரவு வரை உள்ளிருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பல்கலைக்கழக நிர்வாகம்  சம்மந்தப்பட்ட மாணவர்களிடம் தனித்தனியாக கடிதம் பெற்றுக்கொண்டு 2  நாட்கள் வரையில் விடுதியில் தங்குவதற்கு அனுமதி அளித்துள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு, பிரதமர் உருவபொம்மையை எரித்ததாக 30மாணவிகள் உட்பட மொத்தம் 75  மாணவர்கள் மீது நன்னிலம் போலீசார் பல்வேறு  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



Tags : College students , Citizenship law amendment, college students, picketing
× RELATED புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பு;...