×

மாநகராட்சி பணிக்கு கமிஷன் தராததால் ஆத்திரம் ஒப்பந்ததாரரை ஓடஓட விரட்டி அதிமுகவினர் கொடூர தாக்குதல்: சைதாப்பேட்டையில் பரபரப்பு

சென்னை: மாநகராட்சி ஒப்பந்த பணிகளுக்கு கமிஷன் தராததால் சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் மீது அதிமுக நிர்வாகிகள் சாலையில் ஓட, ஓட விரட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவியுள்ளது. சென்னை மாநகராட்சி பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெறுவது வழக்கம். ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுக்க வேண்டும் என்றால் அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சி நிர்வாகிகளுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும் என்று தொடர் புகார்கள் உள்ளது. சென்னை மட்டும் இல்லாது தமிழகம் முழுவதும் டெண்டர் எடுக்கும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் ஆளும் கட்சியினருக்கு கமிஷன் கொடுத்தால் மட்டுமே டெண்டர் பணி நடைபெறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளது. டெண்டர் கொடுக்கும் ஆளும் கட்சியினர், அதிகாரிகளுக்கு மட்டுமல்லாது உள்ளூர் கட்சி நிர்வாகிகளுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியிருப்பதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்தள்ளன.

இதேபோல், சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் ராதாகிருஷ்ணன் மாநகராட்சி பணிகளை டெண்டர் எடுத்து வருகிறார். அவர் எடுக்கும் டெண்டர் பணிகளுக்கு அதிமுக நிர்வாகிகள் கமிஷன் கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சைதாப்பேட்டையில் பொதுமக்கள் அதிகம் கூடியிருந்த சாலையில் மாநகராட்சி ஒப்பந்ததாரர் ராதாகிருஷ்ணன், அவரது மகன் ராஜ்குமாருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென இருவரையும் வழிமறித்த சைதாப்பேட்டை  அதிமுக பகுதி துணை செயலாளர் சந்தோஷ் மற்றும் 142வது வட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர்  ராதாகிருஷ்ணன் மற்றும் ராஜ்குமாரிடம் மாநகராட்சி  ஒப்பந்த பணிகளுக்கு கமிஷன் கேட்டுள்ளனர்.

இதற்கு ராதாகிருஷ்ணன் மறுக்கவே அவர் மீதும் அவரது மகன் ராஜ்குமார் மீதும் அதிமுக நிர்வாகிகள் செல்வராஜ் மற்றும் சந்தோஷ் திடீரென்று தாக்குதல் நடத்தினர். இருவரையும் கீழே தள்ளி கடுமையாக தாக்கினர். மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் தாக்குதல் நடந்ததால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் இருந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிமுக நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினர். மேலும் இருவரையும் அடித்து உதைத்துவிட்டு ‘இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கக்கூட்டாது’ என இருவரையும் செல்வராஜ் மற்றும் சந்தோஷ் மிரட்டியுள்ளனர். அதிமுக நிர்வாகிகளின் மிரட்டலுக்கு பயந்து ஒப்பந்ததாரர் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் ராஜ்குமார் ஆகிய இருவரும் போலீசில் புகார் தராமல் இருந்துள்ளனர். ஆனால், இச்சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Tags : attackers ,commission ,Terrorist attack ,contractor ,corporation ,introverts , Terrorist , attack contractor, introverts
× RELATED மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள...