×

ரஞ்சி கோப்பை லீக் ஆட்டம் அஷ்வின் சுழலில் மூழ்கியது இமாச்சல்: 158 ரன்னுக்கு ஆல் அவுட்

திண்டுக்கல்: தமிழக அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், இமாச்சலப் பிரதேச அணி 158 ரன்னுக்கு சுருண்டது. என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், தமிழக அணியில் பல வீரர்கள் காயம் காரணமாக அவதிப்படுவதால் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. கர்நாடகாவுக்கு எதிரான முதல் போட்டியில் சதம் விளாசிய தினேஷ் கார்த்திக், கேப்டன் விஜய் ஷங்கர், முரளி விஜய், முருகன் அஸ்வின்,  மணிமாறன் சித்தார்த் ஆகியோருக்கு பதிலாக   கே.முகுந்த், ஷாருக்கான், ஜே.கவுசிக், கங்கா தர் ராஜூ, டி.நடராஜன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் காயம் காரணமாக இடம் பெறவில்லை.

டாஸ் வென்ற தமிழ்நாடு பந்துவீச்சை தேர்வு செய்தது. இமாச்சல் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுக்க, அந்த அணி 71.4 ஓவரில் 158 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. சுமீத் வர்மா 30,  ஆகாஷ் வசிஷ்ட் 35, மயாங்க் தாகர் 33 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். 5 பேர் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. தமிழக பந்துவீச்சில் ஆர்.அஷ்வின் 5,  சாய்கிஷோர் 3, கே.விக்னேஷ் 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தமிழக அணி 3 ஓவர்களை சந்தித்து விக்கெட் இழப்பின்றி 8 ரன் எடுத்த நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.  அபினவ் முகுந்த் 6, கே.முகுந்த் 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

புதுச்சேரி அபார பந்துவீச்சு 65 ரன்னில் சுருண்டது சிக்கிம்
புதுச்சேரி கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய பிளேட் பிரிவு லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற புதுச்சேரி அணி பந்துவீசியது. அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த சிக்கிம் 31.3 ஓவரில் 65 ரன்னுக்கு சுருண்டது. அந்த அணியின் பிபேக் தியாலி 22 ரன், மண்டப் பூட்டியா 12 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். புதுச்சேரி பந்துவீச்சில் சாகர் திரிவேதி 5, வினய்குமார் 4 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய புதுச்சேரி அணியின் தொடக்க வீரர்கள் ஆனந்த் 9 ரன், கார்த்திக் 35 ரன் (40 பந்து, 6 பவுண்டரி) எடுத்து  ஆட்டமிழந்தனர். இந்த 2 விக்கெட்டையும் ஈஷ்வர் சவுத்ரி கைப்பற்றினார். அபாரமாக விளையாடிய அருண் கார்த்திக் - பரஸ் டோக்ரா ஜோடி சிக்கிம் பந்துவீச்சை சிதறடித்தது. இருவரும் சதம் விளாசி அசத்தினர். முதல் நாள் முடிவில் புதுச்சேரி 2 விக்கெட் இழப்புக்கு 262ரன் எடுத்துள்ளது. கார்த்திக், டோக்ரா தலா 105 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.


Tags : Ashwin ,league match ,Ranji Trophy ,Himachal , Ranji Trophy, League opener, Ashwin spin, Himachal, 158 runs, all out
× RELATED டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்: அஷ்வினுக்கு பாராட்டு விழா