×

பல அத்தியாவசிய பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி மீண்டும் உயர்த்தப்படுமா?: பரபரப்பான சூழலில் கவுன்சில் இன்று கூடுகிறது

புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரிகள் மீண்டும் உயர்த்தப்படுமா என்ற பரபரப்பு நாடு முழுவதும் உள்ளது. இன்றைய கவுன்சில்  கூட்டத்தில் இது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். ஜிஎஸ்டி வரி முறையை மத்திய அரசு ெகாண்டு வந்தபின் பெரிய அளவில் வரி வருவாய் குவியவில்லை. மாநிலங்களுக்கும் வரி வருவாய் பங்கீடு கிடைக்கவில்லை. இதனால் மாநிலங்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான். ஏற்கனவே இருந்த வரிமுறைகள் மூலம் வருவாய்  கணிசமாக கிடைத்து வந்த நிலையில், இப்போது இழப்பு தான் அதிகம் என்று வெளிப்படையாக மத்திய அரசிடம்  முறையிட்டு வந்தன. அடுத்தடுத்த கூட்டங்களில் பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிகள்  குறைக்கப்பட்டு வந்தன. மாநிலங்களின் கோரிக்கைகளின் படியும் இந்த வரிகள் குறைக்கப்பட்டன. ஆனால், இப்போது  வரி வருவாய் போதுமான அளவில் வராமல் கையை கடிப்பதால் பல மாநில அரசுகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

ஒரு பக்கம் நிர்வாக நடைமுறைகளால் வரிகளை முழுமையாக வசூலிக்க முடியாமல் அரசு திணறுகிறது. இன்னொரு பக்கம், பல வர்த்தகர்கள் வரியை சரியாக கணக்கு காட்டுவதில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரி கணக்கு முறையாக தாக்கல் செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்தாலும், வரி வருவாய் அதிகரிக்கவில்லை.  மூன்று மாதங்களுக்கு பின் கடந்த மாதம் தான் குறிப்பிட்ட இலக்குக்கு நெருக்கமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் வரி வசூலானது குறிப்பிடத்தக்கது. ஆனால், மாநிலங்களுக்கு பங்கீடு அளிக்க இந்த வரி வருவாய் போதுமானதாக இல்லை இதனால், வரியை மீண்டும் அதிகரிக்கலாம் என்று யோசித்து, உயர் அதிகாரிகள் குழுவை கவுன்சில் அமைத்தது. இந்த குழு தன் அறிக்கையை அளித்துள்ளது. 5 சதவீதம் வரி விதிக்கப்பட்ட பொருட்களுக்கு இனி 8 முதல் 10 சதவீதம் வரி விதிக்கலாம்; 10 சதவீத வரி அடுக்கை  எடுத்து விட்டு, 12  முதல் 18 சதவீதம் வரை உயர்த்தலாம்; அதிகபட்சம் 20 சதவீதம் விதிக்கலாம்   என்று கமிட்டி கூறியுள்ளதாக தெரிகிறது. வரி குறைக்கப்பட்ட பல முக்கிய, அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கும் வரி உயரலாம் என்று தெரிகிறது.

இது தொடர்பாக ஏற்கனவே கடந்த வாரம் அறிக்கை கசிந்ததும், பல மாநிலங்கள் அதிருப்தி அடைந்தன. வரி உயர்த்துவதில் மாநிலங்கள் இடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. கேரளா, பஞ்சாப் உட்பட சில மாநிலங்கள் வரியை உயர்த்தலாம் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. இதை சில மாநிலங்கள் ஏற்கவில்லை. இதனால், இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படாமல் தள்ளிப்போவதற்கும் வாய்ப்பு உண்டு என்கின்றனர் அதிகாரிகள். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய கூட்டத்தில் தலைமை தாங்குகிறார்.  அப்போது, வரியை உயர்த்த வேண்டாம் என்றால், மாநிலங்கள் வரி வருவாய் இழப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும்; மாநிலங்கள் சொன்னதால் தான் வரியை குறைத்ததால், அதை மறுபரிசீலனை செய்வது என்பது மாநிலங்கள் கையில் தான் உள்ளது. அதிகரித்தால் வரி வருவாய் இழப்பை குறைக்க முடியும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட் செல்வோம் எதிர்க்கட்சி அரசுகள் எச்சரிக்கை
மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி முறையால் இழப்பு ஏற்படும் போது, அதை மத்திய அரசு சரி செய்யும். இழப்பீட்டை தரும் என்று கவுன்சில் உறுதி கூறியது. ஆனால், இதுவரை மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பீடு தரவில்லை.  ‘எங்களுக்கு இழப்பீடு தருவது பற்றி இன்ைறய கூட்டத்தில் முடிவு செய்யாவிட்டால், நாங்கள் சுப்ரீம் ேகார்ட் செல்வோம்; இதை தவிர வழியில்லை’ என்று எதிர்கட்சி அரசுகள் கூறியுள்ளன. இதனால் இன்றைய கூட்டம் புயலை கிளப்பும் என்று தெரிகிறது.

Tags : Council , Will , GST tax , raised again? , In thrilling surroundings, Council
× RELATED வடலூர் வள்ளலார் சபைக்கு சொந்தமான...