×

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தடியடி ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை போல் உள்ளது: மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கருத்து

மும்பை: ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தடியடி ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை போல் உள்ளது என மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கற்கள் வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். பல்கலைக்கழகத்தினுள் நுழைந்தும் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மகாராஷ்டிர சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, சமூகத்தில் அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டுமென்றே முயற்சிகள் நடைபெற்று வருகிறது. டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த போலீசார் நடந்துகொண்ட விதமானது அன்று ஆங்கிலேயர் ஆட்சியில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் போல் உள்ளது என விமர்சித்தார். மேலும் பேசிய அவர், நாட்டின் இளைஞர்களின் மனதில் அச்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. இளைஞர்களை தொந்தரவு செய்யும் எந்த நாடும் நிலையானதாக இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். இந்த நாட்டின் இளைஞர்களை சீர்குலைக்க வேண்டாம் என்று நான் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம். அவர்களிடம் நிறைய திறன்கள் உள்ளன. இளைஞர்கள் வெடிகுண்டை போன்றவர்கள். அதை நாம் தூண்டக்கூடாது. மாணவர்களிடம் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம், என கூறியுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1919ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் மீது, பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஜெனரல் டயர் பீரங்கியால் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். மூர்க்கத்தனமான இந்த தாக்குதலில் சுமார் 400 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 1000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சுதந்திர போராட்டத்துக்கு எதிரான அடைக்குமுறைகளில் மிகவும் மோசமான நிகழ்வாக, இந்த தாக்குதல் நினைவுகூரப்படுவது குறிப்பிடத்தக்கது.


Tags : university students ,incident ,Jallianwala Bagh ,Uttav Thackeray ,Maharashtra CM ,crackdown , Jamia Milia, Students, Police, Uddhav Thackeray, Jallianwala Bagh
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...