×

கொரில்லா அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானியருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கத் தயாரா?...பிரதமர் மோடி சவால்

ராஞ்சி: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், முஸ்லிம்கள் மத்தியில் எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். குடியுரிமை  சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இச்சட்டத்தை எதிர்த்து தொடர்ச்சியாக போராட்டங்கள்  நடைபெற்று  வருகின்றன.

இதற்கிடையே, டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள், இந்த விவகாரம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். போரட்டத்தின்போது, பேருந்துகள், போலீஸ்  வாகனங்கள்  சிலவும் தீவைத்து எரிக்கப்பட்டன. அந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்ப்புகை குண்டு வீசினர்.

இதற்கிடையே, டெல்லியில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. கிழக்கு டெல்லியில் உள்ள சீலாம்பூரில் சில வாகனங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்ததால் பதற்றம் நிலவி வருகிறது. போராட்டக்காரர்கள்-போலீஸ் இடையே  மோதல் ஏற்பட்டதையடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி போலீஸ் முயன்று வருகிறது.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஜார்கண்டின் பர்ஹாயத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து  எதிர்க்கட்சிகளுக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிக்கும் ஒரு சவாலை விடுக்கிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால், ஒவ்வொரு பாகிஸ்தானியருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவிக்கத் தயாரா? அப்படி அறிவித்தால் அதற்கான பிரதிபலனை நாட்டு மக்கள் அவர்களுக்கு அளிப்பார்கள். குடியுரிமை சட்டம் இந்திய குடிமகனுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் பிரதமர்  மோடி தெரிவித்தார்.

சில கட்சிகள், சமூக விரோதிகள் மாணவர்களை தூண்டி விடுகின்றன. கல்லூரி மாணவர்கள் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துங்கள், நாங்கள் உங்கள் கூற்றை கேட்கிறோம். எதிர்க்கட்சிகள் கொரில்லா அரசியலை நிறுத்த வேண்டும்.  அரசியலமைப்பு சட்டம்தான் எங்களது புனித புத்தகம். காஷ்மீர், லடாக்கில் 370 ஆவது சட்டப்பிரிவை காங்கிரஸ் மீண்டும் கொண்டுவந்துவிடும். இந்திய இஸ்லாமியர்களை அச்சமூட்டுவதற்காக காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும்  பொய்களை கட்டவிழ்த்தது விடுகின்றன என்றார்.


Tags : parties ,guerrilla ,Indian ,Pakistanis ,Opposition , Are Opposition Gorilla Politics Opportunities For Pakistanis To Get Indian Citizenship?
× RELATED மக்களவை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி..!!