×

உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: குல்தீப் சிங் செங்காருக்கான தண்டனை 20-ம் தேதி அறிவிப்பு... டெல்லி தீஸ்ஹசாரி நீதிமன்றம்

டெல்லி: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட உ.பி. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று நேற்று தீர்ப்பளித்த டெல்லி நீதிமன்றம் அவருக்கான தண்டனையை 20-ம் தேதி அறிவிக்கவுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் உன்னாவ் கிராமத்தை சேர்ந்த இளம் பெண், 17 வயது சிறுமியாக இருந்தபோது, கடந்த 2017ம் ஆண்டு அம்மாநிலத்தை சேர்ந்த பாஜ எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி உள்ளூர் போலீசில் புகார் அளித்தார். ஆனால், செங்காரின் செல்வாக்கு மற்றும் அழுத்தம் காரணமாக அப்பெண்ணின் புகாரை விசாரிக்காமல் போலீசார் இழுத்தடித்து வந்தனர். அதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் காவலில் இறந்தார். இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக அப்பெண் ரேபரேலியில் உள்ள நீதிமன்றத்திற்கு தனது வக்கீல் மற்றும் தனது அத்தைகள் ஆகியோருடன் கடந்த ஆண்டு ஜூலை 23ம் தேதி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவர்கள் சென்ற காரின் மீது லாரி மோதி  விபத்துக்குள்ளானது. இதில், அப்பெண்ணின் வக்கீல் மற்றும் இரு அத்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்பெண்ணும், அவரது தாயாரும் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குல்தீப் சிங் செங்கார், அவரது கூட்டாளி சசி சிங் மற்றும் செங்காரின் சகோதரர்கள் 9 பேர் உள்ளிட்டோர் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் செங்காருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு காப்பாற்றப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரம் ஆனதால், செங்காரை கட்சியிலிருந்து நீக்கி கடந்த ஆகஸ்டு மாதம் பாஜ தலைமை உத்தரவிட்டது.  இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 9ம் தேதி செங்காருக்கு எதிராக டெல்லி செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் சிபிஐ தரப்பில் 13 சாட்சிகளும், செங்கார் தரப்பில் 9 சாட்சிகளும் நீதிபதி முன்பாக வாக்குமூலம்  அளித்தனர்.  அனைத்து தரப்பு வாதம் பிரதிவாதங்கள் மற்றும் குறுக்கு விசாரணைகள் முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார்.

தனது உத்தரவில் குல்தீப்சிங் செங்காரை போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளி என அறிவித்தார். இந்த தீர்ப்பை கேட்டதும் குல்தீப் சிங் செங்கார் கோர்ட்டில் கண்ணீர் விட்டு அழுதார். அவருக்கான தண்டனை தொடர்பாக இன்று வாதம் நடைபெற்றது. அப்போது எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு அதிகபட்ச தண்டனை தேவை. குல்தீப் சிங் செங்காரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு போதிய இழப்பீடு தரவேண்டும். டெல்லி தீஸ்ஹசாரி நீதிமன்றத்தில் தண்டனை அறிவிப்பு குறித்த விசாரணையில் சிபிஐ தரப்பு வாதம் செய்தது. மிகவும் குறைந்தபட்சமான தண்டனை விதிக்க வேண்டும் என குல்தீப் சிங் செங்காரின் வக்கீல் கேட்டுக்கொண்டார்.

சிபிஐ, குல்தீப் சிங் செங்கார் தரப்பு வாதத்தையடுத்து தீர்ப்பை டெல்லி தீஸ்ஹசாரி நீதிமன்றம் ஒத்திவைத்தது. இருதரப்பு வாதங்களையும் கவனித்த மாஜிஸ்திரேட் தர்மேஷ் சர்மா, தண்டனை விபரம் வரும் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், கடந்த 2017-ம் ஆண்டு உ.பி.சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது வேட்புமனுவுடன் குல்தீப் சிங் செங்கார் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் நகல்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Unnao Woman Sexual Assault: Punishment for Kuldeep Singh Sengarh ,Unni Woman Sexual Assault: Punishment for Kuldeep Singh Sengarh , Unnao Woman, Sexual Abuse, Kuldeep Singh Sengar, conviction
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...