×

இறகு இருக்கும்போது தவழலாமா? இன்று பாரசீக கவிஞர் ரூமி நினைவு நாள்

ஒரு மனிதன் கவலையில் இருக்கும்போது, அவனுக்கு பிறரின் ஆறுதல் வார்த்தைகள் அல்லது கரங்கள் கட்டாயம் தேவைப்படும். அந்த வகையில் துயருற்றோருக்கு தனது கவிதை வரிகளால் ஆறுதல் தந்ததோடு, துள்ளி எழ வைத்தவர் பாரசீக கவிஞர் ரூமி என்றால் அது மிகையாகாது. இன்று அவரது நினைவுநாள்(டிச.17, 1273).

அவரைப்பற்றி பார்ப்போமா?
கி.பி  1207ம் ஆண்டு செப்.30ம் தேதி மத்திய ஆசியவில் `பால்க்’ என்ற இடத்தில் (தற்போது ஆப்கானிஸ்தான்) பிறந்தவர் ரூமி. அரேபிய பாரம்பரியத்தில் தோன்றினாலும், பெர்சிய மொழியில் மிகவும் ஆர்வம் உடையவராக  இருந்தார் ரூமி. இயற்பெயர் `முஹம்மத்’. ்அழைத்த பெயர் `ஜலாலுதீன்’. அப்போது மங்கோலியர்களின் ஆக்கிரமிப்பு, கொள்ளை போன்ற  தொல்லைகள் அதிகம் இருந்ததால், பால்க் நகர மக்கள் துருக்கி, ரூம்  நகருக்கு குடி பெயர்ந்தனர். 12 வயதில் ரூம் நகருக்கு வந்து பிரபலமானதால், இவருக்கு ரூமி என்ற பெயரே நிலைத்தது என்று கூறுகின்றனர்.

ரூமியின் தந்தை பகாவுதீன் முகமது வலத். இவர்  பால்க்கில் ஆசிரியராக பணியாற்றினர். ரூமியின் ஆரம்பக்கல்வி தந்தையிடம் இருந்துதான் துவங்கியது. இவரது தந்தையிடம் பாடம் படித்தவர் சையத் புர்ஹானுதீன். காலமாற்றத்தில் இவர் ரூமிக்கு கல்வி, கவிதை, கட்டுரை எழுதுவது போன்றவற்றை கற்றுத்தந்தார். தந்தை இறந்ததும் ஷான் தேசம் சென்று, கல்வியை தொடர்ந்தார். பின்னர் அங்கு மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தரும் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.
அப்போதிலிருந்தே கவிதைகள் மீது அதிகம் நாட்டம் கொண்ட ரூமியை, பிரபல பெர்சிய கவிஞர்களான அட்டார், சானை ஆகியோரின் கவிதைகள் அதிகளவு ஈர்த்தன. ஒருநாள் ஷம்சுதீன் தப்ரேஸ் என்கிற சூஃபி பெரியவரைச் சந்தித்த ரூமி, அவருடன் 2 ஆண்டுகள் தன் வீட்டில் சூஃபி ஞானங்களைப் பயின்றார்.  இந்த 2 ஆண்டுகளில் தங்கள் ஆசிரியர் தம்மைவிட்டுப் பிரிய ஷம்சுதீன்தான் காரணம் என்று ரூமியின் மாணவர்கள் அவரிடம் வெறுப்பைக்  காட்டினார். இதனால் அவர் ரூமியைவிட்டுச் சென்று விட்டார்.  அதற்கு 2,500 பாடல்கள்கொண்ட `திவானே ஷம்சே தப்ரேஜ்’ என்ற நூலை  ஷம்சுதீனுக்காக இயற்றினார் ரூமி.

கவிதைகள், நூல்கள், தத்துவங்களில் யதார்த்தம் காட்டி எழுதி அனைவரையும் வியக்க வைத்தார் ரூமி.  இவரது படைப்புகள் பெரும்பாலும் பாரசீக மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இருப்பினும் சில சமயங்களில் துருக்கி, அரபு மற்றும் கிரேக்க மொழிகளையும் பயன்படுத்தியுள்ளார். இவருடைய கவிதைகள் உலகின் பல மொழிகளிலும் பரவலாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பிரபலமடைந்துள்ளன.

இவரது கவிதைகள் சிலவற்றின் மூலம் அவர் கூறிய கருத்துக்களை பார்ப்போமா?
அன்பை நாம் தாய் போல கருத வேண்டும். நாம் பிறந்தது கூட அன்பினால்தான்.  அழகை எங்கோ போய் தேடக்கூடாது. அது நம்மைச்சுற்றியே உள்ளது. ஆனால் நாம் பூங்காவில் நடந்து சென்றபடியே அழகைத் தெரிந்துகொள்கிறோம். எதற்காகவும்,  துயரப்பட வேண்டாம். நீங்கள் இழக்கும் எதுவாயினும் மற்றொரு வடிவத்தில் உங்களிடமே திரும்பவும் வரும். ஒவ்வொருவரும் குறிப்பிட்ட வேலைக்காகவே படைக்கப்பட்டுள்ளனர். அந்த வேலைக்கான ஆசை ஒவ்வொரு இதயத்திலும் வைக்கப்பட்டுள்ளது.

மிகவும் சிறியதாக செயல்படுவதை நிறுத்தி விடுங்கள். நமக்குள் கண்ணுக்குத் தெரியாத வலிமை ஒன்று உள்ளது. நீங்கள் சிறகுகளுடன் பிறந்தவர்கள். பிறகு ஏன் வாழ்க்கையில் தவழ்ந்து செல்ல வேண்டும். உங்கள் வார்த்தைகளை உலகிற்கு உயர்த்திக்காட்டுங்கள். தாகம் மட்டும் தண்ணீரைத் தேடுவதில்லை, தண்ணீரும் தாகத்தை தேடுகிறது. இப்படி அர்த்தம் பொதிந்த கவிதைகள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ரூமி.

Tags : Rumi ,Persian , rumi
× RELATED நலம் காக்கும் விதைகள்- வால்நட்ஸ்(Walnuts)