×

ஆதரவற்றோருக்கு நிதியுதவி வசூலிப்பதாக பக்தர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்

பழநி: ஆதரவற்றோருக்கு நிதியுதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தி பழநி பக்தர்களை குறிவைத்து செயல்படும் மோசடி கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர். இவர்களிடம் வியாபாரம் செய்வதற்காக அடிவாரப்பகுதியில் ஏராளமான கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் பழநி நகரில் சுற்றித்திரிந்து வருகின்றனர். இந்நிலையில் பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களை ஏமாற்றவும் ஒரு கும்பல் சுற்றி வருவதாக புகார் எழுந்தது. ஆதரவற்றோருக்கு நிதியுதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தி கையில் ரசீது புத்தகங்களுடன் ஏராளமானோர் பக்தர்கள் கூடும் இடங்களில் சுற்றித்திரிந்து வருகின்றனர்.

பக்தர்களும் கோயிலுக்கு வந்த இடத்தில் தானம் செய்வது நல்லதெனக் கருதி ஏராளமான பணங்களை வழங்கி விடுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இந்நபர்கள் குறித்து ஞானதண்டாயுதபாணி பக்தர்கள் பேரவை நிர்வாகி செந்தில்ஜி கூறுகையில், பழநி அடிவாரப் பகுதியில் ஏராளமானோர் கையில் நோட்டீஸ் மற்றும் ரசீது புத்தகங்களுடன் சுற்றித்திரிந்து வருகின்றனர். ஆதரவற்ற முதியவர்களை வைத்து நடத்தப்படும் ஆசிரமங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் தொண்டு அமைப்புகள் என பல்வேறு பெயரில் பக்தர்களை ஏமாற்றி பணம் கறந்து விடுகின்றனர். ஆனால், இவர்கள் முறையான ஆட்கள் கிடையாது. பெரும்பாலானோர் ஏமாற்று பேர்வழிகளே ஆவர். இவர்களிடம் போலீசார் உரிய விசாரணை நடத்தி, போலி நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி வரும் பக்தர்களின் மீது நடத்தப்படும் இதுபோன்ற நூதன பொருளாதார குற்றங்களை தடுக்க வேண்டும் என்றார்.

Tags : pilgrims ,orphans , Fraud
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்