×

திருப்பூர் மாவட்டத்தில் டெங்குவுக்கு ஒரே மாதத்தில் 5 குழந்தை பலி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஒரு மாதத்தில் 5க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் பலியாகி உள்ள நிலையில், பள்ளியில் இருந்தே பெரும்பாலான குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவியதாக கூறப்படுகிறது. திருப்பூர் மாவட்ட மக்கள் டெங்கு பாதிப்பினால், அச்சத்தில் உள்ளனர். அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், அவிநாசி, காங்கயம், பல்லடம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். ஏராளமான குழந்தைகள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பெரும்பாலும், 14 வயதுக்கு குறைவான குழந்தைகளே, எளிதில் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகின்றனர். அதிலும், பள்ளியில் இருந்து வீடு திரும்பும், குழந்தைகள் பலருக்கு காய்ச்சல் இருப்பது, சுகாதாரத் துறையினர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பல பள்ளிகளில் பயன்படுத்தாத பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களை, வகுப்பறையின் ஓர் பகுதியிலோ, அல்லது பள்ளியின் வெளியே அமைந்துள்ள காலியிடங்களிலோ போட்டு வைக்கின்றனர். இருட்டான இந்த அறைகள், கொசுக்களின் இருப்பிடமாக மாறி விடுகிறது. பள்ளியின் வெளியே குவிக்கப்பட்டுள்ள பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களில், மழை நீர் தேங்கி, கொசு உற்பத்தியிடமாக மாறி விடுகிறது. மாணவர்கள் படிக்கும் வகுப்பறைகள், பெரும்பாலும் வெளிச்சமின்றி காணப்படுவதால், டெங்கு கொசுக்கள் மாணவர்களின் கை, கால்களில் கடித்து நோயை பரப்புகின்றன. பள்ளி நிர்வாகங்களின் போதிய பராமரிப்பின்மையும், அலட்சியமும் நோய் காரணிகளாக அமைகின்றன. கொசுக்கடி வாங்கும் குழந்தைகளுக்கு காய்ச்சல் தீவிரமடைகிறது. இப்படி, நோய் தாக்குதல் பள்ளியில் இருந்தே ஆரம்பிக்கிறது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள, உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில், கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தாலும், ஆசிரியர்களோ, நிர்வாகிகளோ கண்டுகொள்ளாமலே உள்ளனர். இது போன்ற கல்வி நிறுவனங்களால், குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக அமைகிறது.

எனவே, வீடுகள், தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் ஆய்வு நடத்தும் சுகாதாரத் துறையினர் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களிலும் ஆய்வை தீவிரப்படுத்த வேண்டும். பள்ளிகளுக்கு உத்தரவிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், டெங்கு கொசு உற்பத்திக்கு சாதகமான சூழல் உள்ள பள்ளிகளை அடையாளம் கண்டு, தலைமை ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி தாளாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் கல்வி அதிகாரிகள் தயங்கக்கூடாது. அப்போதுதான் குழந்தைகள் உயிரிழப்பை கட்டுப்படுத்த முடியும்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் வீடுகளில், ஆய்வு நடத்தி வருகிறோம். இதில், பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போதே, குழந்தைகள் காய்ச்சலுடன் வந்ததாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். தற்போது, வீடு, நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். உயர் அதிகாரிகள் உத்தரவிட்டால், கல்வி நிறுவனங்களில் ஆய்வில் இறங்குவோம்’ என்றனர். இது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளிகளில் பயன்படுத்தாத கழிவறைகள், மேற்கூரைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களிடம் வலியுறுத்துவதுடன், பள்ளிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பி வருகிறோம். தொடர்ச்சியாக பள்ளிகளில் ஆய்வும் நடத்தி வருகிறோம் என்றனர்.

சம்பிரதாய ஆய்வு

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூர் மாநகராட்சி, 1-வது மண்டலம் 14வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்த, மாநகராட்சி சுகாதாரதுறையினர் ஏதேச்சையாக, அங்குள்ள பிரபல தனியார் பள்ளிக்கு சென்று பார்த்தனர். அப்போது, பள்ளி வளாகத்தில் கொசு உற்பத்தியாகும் வகையில் கட்டிட கட்டுமானப் பொருட்கள், பழைய உடைந்த இருக்கைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, பள்ளி நிர்வாகத்திற்கு அபராதம் விதித்ததோடு, இனி இதுபோன்று பள்ளி வளாகத்தை அசுத்தமாக வைத்திருக்கக்கூடாது என அறிவுறுத்தி சென்றனர். இதேபோல், பல பள்ளிகள் கடும் சுகாதாரக்கேட்டுடன் இருப்பதாக பெற்றோர் மத்தியில் புகார் எழுந்தும், அதற்கு பிறகு வேறு எந்த பள்ளியிலும் அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Tags : baby ,district ,Tirupur , Dengue
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி