×

விவசாய நிலங்களுக்கு செல்ல மானூர் பெரியகுளம் கால்வாயை நீந்தி கடக்கும் கிராம மக்கள்

மானூர்: எட்டாங்குளம் கிராமத்தினர் மானூர் பெரியகுளம் நீர்வழிப்பாதையில் நீந்திவிவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால் பாலம் கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம், மானூர் தாலுகா, விவசாயம் நிறைந்த பகுதியாகும். துணைத் தொழிலாக கால்நடை வளர்ப்பு செய்து வருகின்றனர். இங்கு மானாவாரி மற்றும் புஞ்சை நிலங்கள் 80 சதவீதமும் மற்ற 20 சதவீதம் நஞ்சை நிலங்களும் உள்ளன. இப்பகுதி விவசாயிகளுக்கு வடகிழக்கு பருவமழை கைகொடுக்கிறது. நஞ்சை நிலங்களுக்கு இப்பகுதியில் ஒடும் சிற்றாறு மூலம் நீர்ப்பாசன வசதி உள்ளது. எனினும் வடகிழக்கு பருவமழை அதிகமாக உள்ள காலங்களில் மட்டும் விவசாயப்பணிகள் தீவிரமாக நடைபெறும். ஆனால் இப்பகுதியில் பல ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை பொய்த்து விவசாயிகள் அனைவரும் கட்டுமான தொழிலுக்கும் கூலித்தொழில் தேடியும் அலைந்து திரியும் நிலை உள்ளது.

இந்நிலையில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்து வருவதால் மானாவாரி நிலங்களில் பயறு, உளுந்து போன்றவையும் புஞ்சை நிலங்களில் கிணற்றுப்பாசானம் மூலம் நெல் நடவும் செய்து வருகின்றனர். சிற்றாற்றில் நீர் வரத்து உள்ளதால் இப்பகுதியிலுள்ள சிறிய குளங்கள் நிறைந்து பெரிய குளங்களுக்கு தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் விவசாயப்பணிகளை தீவிரப்படுத்தியதோடு அதற்கென கையில் வைத்திருந்த சொற்ப பணங்களையும் செலவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மானூர் பெரிய குளத்திற்கு நீர்வரத்து இருப்பதால் அதன் அருகே உள்ள எட்டாங்குளம் கிராமத்தின் புஞ்சை விவசாய நிலங்கள் மானூர் குளத்தின் நீர்வழிப்பாதையை கடந்து செல்லும் நிலை உள்ளது. இங்கு 750 ஏக்கருக்கும் மேல் 150க்கும் மேற்பட்ட மோட்டார் பம்ப் செட்டுகளுடன் கூடிய விவசாய நிலங்கள் உள்ளதால் விவசாயப்பணிக்கு செல்லும் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் 10 அடிக்கு மேல் ஆழம் கொண்ட நீர்வழிப்பாதையை நீந்தி கடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் விவசாயப்பணிகளுக்கு நீந்த இயலாதவர்களும் வயோதிகர்களையும் அழைத்து செல்லும் போது ஆட்டோக்கள் மூலம் செலவு செய்து 30 கி.மீ தூரம் கடந்து சென்று மீண்டும் எட்டாங்குளம் அருகாமையிலுள்ள விவசாய நிலங்களுக்கு சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் பார்வையிட்டு நீர்வழிப்பாதையை கடந்து செல்ல உயர் மட்ட பாலம் அமைத்து தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயியும் முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான புதியவன் மற்றும் முருகன், தூதன் ஆகியோர் கூறியதாவது: எங்கள் கிராமத்தினர் விவசாயம் மற்றும் கால்நடை தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர். இங்கு 500க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன. எங்கள் கிராமம் மானூர் பெரிய குளத்தின் வடக்குப்பகுதியிலும், விவசாய நிலங்கள் மானூர் பெரிய குளத்தின் நீர் வழிப்பாதையின் தெற்குப்பகுதியிலும் உள்ளது. இங்கு 750 ஏக்கருக்கு மேல் புஞ்சை நிலங்கள் 150மின் மோட்டார் இணைப்புகள் கூடிய கிணற்றுப்பாசனத்துடன் உள்ளது. இப்பகுதியில் வடகிழக்கு பருவமழை நம்பி விவசாயம் நடைபெறுகிறது. கோடை காலங்களில் கிணற்றிலுள்ள தண்ணீர் மூலமாக கோடைப்பயிர் மற்றும் காய்கறிகள் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதியில் பல ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை பொய்த்ததாலும் கால்நடைகளை நம்பி வாழ்வாதாரம் இருப்பதால் தினமும் விவசாயப்பணிக்கும் கால்நடை மேய்ச்சலுக்கும் மானூர் பெரிய குளத்தின் நீர்வழிப்பாதையை கடந்து செல்வது கட்டாயமாகும். தண்ணீர் இல்லாத காலங்களில் தரை வழியாக கடந்து சென்று வருவது எளிதாக இருந்தாலும், இது போன்ற பருவமழை காலங்களில் நீர்வரத்து கால்வாயில் தொடர்ந்து 3 மாதத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் மிகவும சிரமத்துடன் காலையிலும் மாலையிலும் நீந்தி கடந்து செல்லும் இக்கட்டான நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை கலெக்டரிடமும், அதிகாரிகளிடமும் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. எங்கள் நிலை அறிந்து உடனடியாக அரசு பார்வையிட்டு உயர்மட்ட பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : canal ,lands ,Manoor Periyakulam , Manur
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்