×

இந்தியாவின் பொருளாதார சரிவு அதிர்ச்சியளிக்கிறது: ஐஎம்எப் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா பேட்டி

வாஷிங்டன்: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் குறைவு பலருக்கு மட்டுமல்ல எங்களுக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநரும், இந்திய வம்சாவளி பெண்மணியான கீதா கோபிநாத் அறிவுறுத்தியுள்ளார். ஐஎம்எப் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் இந்த வாரம் இந்தியா வருகிறார். அதற்கு முன்னதாக இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் சரிவு, பொருளாதார நிலைகுறித்து பேட்டியளித்தார்.

உள்நாட்டில் மக்களிடம் குறைந்துவரும் தேவை, உற்பத்தித் துறையில் வளர்ச்சியை வேகப்படுத்துவது, வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு ஆதரவு அளிப்பது ஆகிய 3 கொள்கைகளும் இந்திய அரசுக்கு தற்போது மிகவும் முக்கியமாகும். பொருளாதாரச் சுழற்சியில் அடிப்படை கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்ள இது உதவும் என கீதா கூறினார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2-வது முறையாக வெற்றிகரமாக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் உடனடியாக அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏனென்றால் பொருளாதார வளர்ச்சியான ஜிடிபி தொடர்ந்து 6-வது காலாண்டாகக் குறைந்து 4.5 சதவீதமாகச் சரிந்துவிட்டது. மேலும் நுகர்வு குறைவால் உற்பத்தித் துறையும் மந்தமாகிவிட்ட சூழ்நிலையில் உள்ளது.

அடுத்ததாக நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்கான வழியில் அரசு பயணிப்பது மிகவும் அவசியமாகும். அதிகமான கடனை குறைப்பதன் மூலம் நம்பகத்தன்மை ஏற்பட்டு புதிய தனியார் முதலீடுகள் நாட்டுக்குள் வரும் நிலை ஏற்படும். இந்தியாவின் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கு முதலீட்டை ஈர்ப்பதும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் அவசியமாகும். அதுமட்டுமல்லாமல் கிராமப்புற பொருளாதாரம் வளர ஆதரவு அளித்தல் அடிப்படை கட்டமைப்புக்குச் செலவிடுவதை அதிகப்படுத்துதல், ஜிஎஸ்டி வரியை முறைப்படுத்துதல், நேரடி வரியில் சீர்திருத்தம், தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்களுக்கு ஏற்க கொள்கைகளை உருவாக்குதலும் அவசியமாகும் என்று கீதா கூறினார்.

இந்திய அரசு 3 முக்கிய கொள்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். வங்கிகள், நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் வரவு செலவு அறிக்கை ஆகியவற்றைச் சீரமைக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகத்தை மேம்படுத்தி கடன் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும். வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கடன் நெருக்கடியில் சிக்காமல் தவிர்க்கும் வகையில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். இறுதியாகத் தொழிலாளர், நிலம், சந்தை ஆகியவற்றில் சீர்திருத்தம் செய்து போட்டியையும், நிர்வாகத்தையும் தரம் உயர்த்த பாடுபட வேண்டும். அதோடு உள்கட்டமைப்புக்கான முதலீட்டுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். பெருகிவரும் இளைஞர்களுக்கு அதிகமான, சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம் அகண்டரீதியில் முழுமையான வளர்ச்சியை எட்டுவதற்கு உடல் நலம் மற்றும் சுகாதாரத்தில் முன்னேற்றம் அளிக்கப்பட வேண்டும். இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவு பலருக்கு மட்டுமல்ல சர்வதேச நிதியத்துக்கே அதிர்ச்சியாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாகச் சரிந்துள்ளது. முதலீட்டுக் குறைவு, நுகர்வு வளர்ச்சி குறைந்தது ஆகியவை பொருளதார சரிவுக்கு காரணங்களாக இருக்கின்றன. முதலீட்டு நுகர்வு, நுகர்வு குறைவுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. கிராமப்புற வருமான வளர்ச்சி பலவீனமாக இருக்கிறது. நல்ல பருவமழை, வேளாண்துறை சீர்திருத்தம், உணவு மேலாண்மை திட்டங்கள் ஆகியவற்றால் உணவுப் பொருட்கள் விலையும் குறையும். உணவுப் பொருட்கள் விலை குறைவது சாதகமான மாற்றங்களைப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும். அதற்கு ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்று கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

Tags : Gita India ,downturn ,India ,IMF , India, economic downturn, shock, IMF chief economist, interview with Gita
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...