×

லேட்டாக வந்த அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் ‘செம டோஸ்’ : ‘ராஜினாமா செஞ்சுட்டு போயிடுங்க’

பெங்களூரு : தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு  கூட பணிக்கு வராத அதிகாரிகளை கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்துவிட்டு  செல்லுங்கள் என கண்டித்தார். கர்நாடக முதல்வர்  எடியூரப்பா தான் பதவி ஏற்றது முதல், நாள்தோறும் பல்வேறு துறைகளை சேர்ந்த  அதிகாரிகளை அழைத்து துறை ரீதியாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்த  தகவல்களை கேட்டறிகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை, சமூக நலத்துறை அலுவலகத்தில் பணி நிமித்தம் காரணமாக  பொதுமக்கள் சிலர் அதிகாரிகளை காண வந்திருந்தனர். ஆனால், அதிகாரிகள்  இருக்கையில் இல்லாததால் பொதுமக்கள் கால் கடுக்க காத்திருந்தனர். இதுகுறித்து முதல்வர் எடியூரப்பாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. முதல்வர் எடியூரப்பா நேற்று காலை 10.15 மணிக்கு  தலைமைச் செயலகத்துக்கு வந்தார். தனது அறைக்கு சென்ற சிறிது நேரத்தில், சரியாக  10.30 மணிக்கு சமூக நலத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு  சென்றார்.

அங்கு ஊழியர்கள் மட்டும் இருந்தனர். அதிகாரிகள் இல்லை.  இதுகுறித்து ஊழியர்களிடம் எடியூரப்பா, ‘‘உயர் அதிகாரிகள் வரவில்லையா?’’   எனக் கேட்டார். ஊழியர்கள் இன்னும் வரவில்லையென்று கூறினார். இதனால்  ஆவேசம்  அடைந்த முதல்வர் எடியூரப்பா ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டு அதிகாரியின்  வருகைக்காக காத்திருந்தார். முதல்வர் தனக்காக காத்திருக்கிறார்  என்பதை அறியாத உயர் அதிகாரி காலை 11.00 மணிக்கு சாவகாசமாக நடந்து வந்து  அலுவலகத்திற்குள் 11.05 மணிக்கு நுழைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த  முதல்வர், இதுதான் பணிக்கு வரும் நேரமா? உயர் அதிகாரிகளே இப்படி தாமதமாக  வந்தால் ஊழியர்கள் எப்படி சரியாக பணிக்கு வருவார்கள்.  உரிய  நேரத்தில் பணிக்கு வர முடியவில்லை என்றால், வேலையை ராஜினாமா செய்யுங்கள் என கண்டித்தார். அதிகாரிகள் சரியான  நேரத்திற்கு பணிக்கு வந்தால் பொதுமக்கள் ஏன் தங்களின் பணிக்காக கால்கடுக்க  காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது?. பொதுமக்களுக்காகத்தான் அதிகாரிகள்  காத்திருக்க வேண்டும். இனியாவது உரிய நேரத்திற்கு வந்து மக்களுக்கு  சேவை செய்ய முயற்சியுங்கள். இல்லையென்றால் வீட்டுக்கு செல்லுங்கள் என டோஸ்  விட்டார். முதல்வர் எடியூரப்பா   எச்சரித்தது  அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags : Chief Minister ,Karnataka ,Semi-Officers , Karnataka CM, Semi-Officers
× RELATED ஆளுநர் பதவியை விட சுயமரியாதையே...