×

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்பணப்பட்டுவாடா புகாரில் முகாந்திரம் இல்லை: வழக்கை முடித்துவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின்போது முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீதான பணப்பட்டு வாடா புகாரில் முகாந்திரம் இல்லை என்ற விழுப்புரம் மாவட்ட காவல்துறை விளக்கத்தை ஏற்று, இயக்குனர் கவுதமன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலின்போது அதிமுக, திமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா செய்ததாகவும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும், இயக்குனருமான வ.கவுதமன் விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் அக்டோபர் 14ம் தேதி புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் மீது சிஎஸ்ஆர் வழங்கப்பட்ட நிலையில், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் கவுதமன் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கவுதமன் அளித்த புகாரில் விசாரணை மேற்கொண்டதாகவும், தேர்தல் பறக்கும் படையினரிடம் விளக்கம் பெற்றதாகவும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. மேலும், விசாரணையில் கவுதமன் கொடுத்த புகாரில் முகாந்திரம் இல்லை என்று தெரியவந்ததால் அந்த புகார் முடித்துவைக்கப்பட்டது என்றும் போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.


Tags : Vikravandi ,Madras High Court , Madras High Court, will closes , case about election petition
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடக்கம்!