×

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு: மே.வங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையில் பிரமாண்ட பேரணி

கொல்கத்தா: குடியுரிமை சட்ட திருத்தத்தை மேற்கொண்ட மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில்மேற்குவங்க முதல்வர் மம்தா தலைமையில் நேற்று பிரமாண்ட பேரணி நடந்தது. கொல்கத்தாவில் உள்ள ெரட் சாலையில் இருந்து தொடங்கிய பேரணியில் பல ஆயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். வடக்கு கொல்கத்தாவில் உள்ள நோபல் பரிசு பெற்ற ரபீந்திரநாத் தாகூர் இல்லம் அருகே இந்த பேரணி நிறைவடைந்தது. தொடர்ந்து, “நாங்கள் ஒருபோதும் தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டத்தை அனுமதிக்க மாட்டோம்” என்று கட்சி தொண்டர்களுடன் முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி மொழி ஏற்றார்.

பேரணியில் முதல்வர் மம்தா பேசியதாவது: நான் உயிரோடு இருக்கும் வரை குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை மேற்கு வங்கத்தில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன். எனது அரசை உங்களால் டிஸ்மிஸ் செய்ய முடியும். என்னை சிறையில் கூட அடைக்க முடியும். ஆனால் இந்த கருப்பு சட்டத்தை எனது மாநிலத்தில் அமல்படுத்த  ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன். இந்த சட்டத்தை நீக்கும் வரை ஜனநாயக ரீதியிலான எங்களது போராட்டம் தொடரும். எனது சடலத்தை தாண்டி தான் மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அவர்களால் அமல்படுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே கிழக்கு மிட்னாபூர் மற்றும் முர்ஷிதாபாத் பகுதிகளில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சீல்டா டைமண்ட் ஹார்பர் மற்றும் நாம்கானா பகுதிகளில் ரயில் தண்டவாளங்களை மறித்து போராட்டம் நடந்தது.

கவர்னர் அட்வைஸ்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை கைவிட வேண்டும் என அம்மாநில கவர்னர் ஜகதீப் தன்கார் வலியுறுத்தி உள்ளார். கவர்னர் தன்கார் டிவிட்டர் பதிவில், “முதல்வர், அமைச்சர்கள் கண்டன பேரணியில் ஈடுபடுவதை பார்த்து மனவேதனை அடைந்தேன். இது அரசியலமைப்புக்கு விரோதமானது. இதுபோன்றவற்றை  முதல்வர் மம்தாவை தவிர்க்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

அசாமை தொடர்ந்து இணையதளம் முடக்கம்
அசாமில் ஒரு வார காலம் நடந்த போராட்டங்கள் ஓய்ந்துள்ளதால் நேற்று ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. கவுகாத்தியில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும்,  திப்ரூகர் மாவட்டத்தில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு இருந்தது. அசாமில் விரைவாக அமைதியான சூழல் திரும்பி வருவதால் ஆங்காங்கே குவிக்கப்பட்டு உள்ள ராணுவ வீரர்கள் ஓரிரு நாளில் திரும்ப பெறப்படுவார்கள் என ராணுவம் கூறியுள்ளது. இதற்கிடையே, இணையதள சேவை இன்று காலை வரை முடக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Mamata ,rally ,Chief Minister ,Mamta , Citizenship, Law Amendment, Protest, May Day Chief Minister, Mamta
× RELATED பாஜவை திருப்திபடுத்த 7 கட்ட தேர்தல் அட்டவணை: மம்தா விமர்சனம்