×

கடல் பரப்பில் நடக்கும் குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்குவதை எதிர்த்து வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க அவகாசம்

மதுரை:  கடல் பரப்பில் நடக்கும் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டப்பிரிவை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை அவகாசம் அளித்துள்ளது. மதுரை, குட்ஷெட் தெருவைச் சேர்ந்த ரமீஸ் அஜ்மல்கான், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  கடல் வழி பயணம் மற்றும் கடல் திட்டுகள் மீதான சட்ட விரோத செயல்களுக்கான சட்டத்தின் ஒரு பிரிவில், கொலை குற்றங்களுக்கு மரண தண்டனை மட்டுமே வழங்கப்படுகிறது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அனைவரும் சமம் என்பதையும், தனி மனித உரிமையை மீறும் வகையிலும் உள்ளது. அதே நேரம் நீதிமன்றத்தின் அதிகாரத்தை பறிக்கும் விதமாகவும் உள்ளது. பல்வேறு வழக்குகளில் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை என்று உள்ளது.

ஆனால், இந்த பிரிவில் மரண தண்டனை மட்டுமே என கூறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டதாக இல்லை. மரண தண்டனை என்பது மனிதத்தன்மைக்கு எதிரானது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பல நாடுகளில் மரண தண்டனை நீக்கப்பட்டுள்ளது. எனவே, கடல் பரப்பில் நடக்கும் கொலை உள்ளிட்ட குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டப்பிரிவை செல்லாது என அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, மனு மீதான விசாரணையை 3 வாரம் தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : government ,Central ,executions , Maritime, crimes, executions, prosecutions, central government
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...