×

ஆதிதிராவிடர் நலத்துறையை தமிழகத்தில் பட்டியல் சாதிகள் நலத்துறை என மாற்ற கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஆதிதிராவிட நலத்துறை என்று இருப்பதை பட்டியல் சாதிகள் நலத்துறை என்று அறிவிக்க கோரி தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்  கூறியிப்பதாவது: தமிழகத்தில் 76 வகுப்பினர் பட்டியல் இனத்தவர்கள் என்ற வரையறைக்குள் கொண்டுவரப்பட்டு அவர்களுக்காக ஆதிதிராவிடர் நலத்துறை என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த 76 வகுப்பினர் பட்டியலில் 2வதாக ஆதிதிராவிடர் பிரிவும் உள்ளது. 76 இனங்களில் ஒரு இனமாக உள்ள ஆதிதிராவிடர் என்ற பிரிவை ஒட்டுமொத்த பிரிவுக்கும் பொதுவாக வைத்து துறை உருவாக்கப்பட்டுள்ளது.
 
 நாடு முழுவதும் உள்ள பட்டியலின மக்களுக்கு அந்தந்த மாநிலங்களில் பெயர் வைப்பது குறித்து மத்திய அரசு, மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டு கடந்த 1981ல் கடிதம் எழுதியது.  தமிழகத்தில் இந்த துறையை ஆதிதிராவிடர் நலத்துறை என்று அழைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2010 ஏப்ரல் 26ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறையை பட்டியல் சாதிகள் நலத்துறை என்று மாற்ற வேண்டும் என்று மெஜாரிட்டி உறுப்பினர்கள் பேசியுள்ளனர்.
 ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஆதிதிராவிடர் நலத்துறை என்ற பெயரை பட்டியல் சாதிகள் நலத்துறை என்று மாற்றுமாறு உத்தரவிட வேண்டும். ஆதிதிராவிடர் என்று அழைக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.  

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு  வந்தபோது  நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு என்ன முடிவை எடுத்துள்ளது என்பது குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் மனுதாரர் பெறலாம் என்று அறிவுறுத்தி விசாரணையை ஒத்திவைத்தனர். மீண்டும் இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் நீதிபதி ஹேமலதா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது . அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் விஜயேந்திரன் இதுதொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவலைப் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள்  பிப்ரவரி 3ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டனர்.

Tags : Tamil Nadu ,welfare department ,Adivasi ,Scheduled Castes Welfare Department ,Scheduled Castes , SC welfare, state, federal and state governments, HC
× RELATED வரும் 26, மே 7ம் தேதி பொது தேர்தல்...