×

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திமுக ஆர்ப்பாட்டம்: காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. காஞ்சிபுரத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான “மதசார்பின்மை”, “சமஉரிமை”, “சகோதரத்துவம்”, “சுதந்திரம்” உள்ளிட்ட அனைத்தையும் ‘குடியுரிமை திருத்தச் சட்டம்’ மூலம் தகர்த்துள்ள மத்திய பாஜ அரசுக்கு துணை நின்று-சிறுபான்மையினர்-ஈழத்தமிழர்களுக்கு அதிமுக அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது. மாநிலங்களவையில் அதிமுக அளித்த ஆதரவு, இந்த தமிழர் விரோத குடியுரிமை மசோதா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. மத்திய பாஜ அரசின் சிறுபான்மையினர் விரோத-தமிழர் விரோத செயல்கள் அனைத்திற்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் தமிழின விரோத அதிமுக அரசைக் கண்டித்து, திமுக சார்பில் டிசம்பர் 17ம் தேதி (இன்று) மாவட்டச் செயலாளர்கள் தலைமையில், மாவட்டந்தோறும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் இன்று காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரம் காந்தி ேராடு தேரடியில் இன்று காலை 9 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை வகிக்கிறார். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார். சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று காலை 9 மணியளவில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகிக்கிறார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் முன்னிலை வகிக்கிறார்.சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார். இதில் திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமை வகிக்கிறார். இதில் கனிமொழி எம்பி கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார். சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைமை வகிக்கிறார். வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஆர்.டி.சேகர் எம்எல்ஏ முன்னிலை வகிக்கின்றனர். இதேபோல, அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் தலைமை வகிக்கின்றனர்.

Tags : protests ,DMK ,Tamil Nadu ,MK Stalin ,Kanchipuram Citizenship Law Bill Condemning ,Kanchipuram ,Tamil Nadu Today Demonstration: Stalin's Association , Citizenship Bill, Tamil Nadu, DMK Demonstration, Kanchipuram, MK Stalin
× RELATED பள்ளி திறப்பு அன்றே மாணவர்களுக்கு...