×

கோடிகளில் சொத்து மதிப்பை பட்டியலிடும் குமரி வேட்பாளர்கள்

நாகர்கோவில்: உள்ளாட்சி தேர்தலிலும் வேட்பாளர்கள் பலர் கோடிகளில் தங்கள் சொத்துமதிப்பை தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் இன்று (16ம் தேதி) வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் ஆகும். ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் வேட்பாளர்கள் தங்கள் சொத்துவிபரங்களை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற, நாடாளுமன்ற வேட்பாளர்கள் போன்று உள்ளாட்சி வேட்பாளர்களும் வேட்புமனுவில் தங்களது மற்றும் தங்களை சார்ந்தவர்களின் சொத்துவிபரங்களை தெரிவித்து வருகின்றனர். இவர்களில் பலர் கோடீஸ்வர வேட்பாளர்களாகவும் உள்ளனர். மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடும் நிலை உள்ளது. இந்தநிலையில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் திக்கணங்கோடு ஊராட்சியை சேர்ந்த மெர்லியன்ட் தாஸ் என்பவர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது சொத்து மதிப்பை வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். அதில் தனக்கு அசையும் சொத்துகள் ரூ.38 லட்சத்து 59 ஆயிரத்து 937 இருப்பதாகவும், மனைவி பெயரில் ரூ.38 லட்சத்து 44 ஆயிரத்து 779 இருப்பதாகவும், மக்கள் பெயரில் ஒருவருக்கு ரூ.5 லட்சத்து 28 ஆயிரம், ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்த 840 இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அசையா சொத்துகளில் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்து விலை ரூ.1 கோடி 26 லட்சம், மனைவி பெயரில் பரம்பரை சொத்து ரூ.60 லட்சம் உட்பட தனது பெயரில் ரூ.2 கோடி 88 லட்சத்து 59 ஆயிரத்து 937 இருப்பதாகவும், தனது மனைவி பெயரில் 98 லட்சத்து 44 ஆயிரத்து 779 இருப்பதாகவும் தனது மற்றும் மனைவி, குழந்தைகள் சொத்து மதிப்பு என்று மொத்தம் ரூ.3 கோடி 93 லட்சத்து 78 ஆயிரத்து 556 என்று வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தர்மபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்ற கணேசன் மனைவி ரெங்கநாயகி தனது பெயரில் மொத்தம் ரூ.75 லட்சத்து 15 ஆயிரம், கணவர் பெயரில் ரூ.1 கோடி 22 லட்சத்து 33 ஆயிரம் என்று மொத்தம் ரூ.1 கோடி 97 லட்சத்து 48 ஆயிரம் என்று குறிப்பிட்டுள்ளார். ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ள அதிமுக வேட்பாளர் எம்எஸ்சி பட்டதாரி அனுபிரியதர்சினி தன்னை சார்ந்தவர் பெயரில் ரூ.92 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை போன்று கோடிகளிலும், லட்சங்களிலும் வேட்பாளர்கள் பலர் தங்கள் சொத்து மதிப்பை தாக்கல் செய்து வருகின்றனர்.

Tags : nominees ,Kumari , Cody, Kumari candidates
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...