×

மேற்கு வங்காளத்தில் தொடரும் போராட்டம்: நேரில் வந்து நிலைமையை எடுத்துரைக்க வேண்டுமென மம்தா பானர்ஜிக்கு கவர்னர் அழைப்பு

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக தன்னை நாளை நேரில் சந்தித்து நிலைமையை எடுத்துரைக்க வேண்டுமென மம்தா பானர்ஜிக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதையடுத்து சட்டமானது. இந்த குடியுரிமைத்திருத்த சட்டத்தின்படி, கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்ஸிகள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.

இந்தியாவில் அவர்கள் குடியேறிய 5 ஆண்டுகளில் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருக்கும் இந்த சட்டத்துக்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வரவாய்ப்புள்ளதாக கூறி இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அசாம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வலுத்த போராட்டம் தற்போது மேற்குவங்க மாநிலத்திலும் தீவிரமடைந்துள்ளது. 3ம் நாளாக மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ரயில் நிலையம், ரயில்கள், பேருந்துகள் என பொது சொத்துகள்  தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுமென திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதலமைச்சரும்மான மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக குடியுரிமை சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம் எனவும் கூறியுள்ளார். இதனிடையே அம்மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஆளுநர் ஜகதீப் தன்கர் நேற்று உத்தரவிட்டு இருந்தார். ஆனால் அவர்கள் இன்று ஆஜராகவில்லை. இதையடுத்து முதல்வர் மம்தா பானர்ஜியை நேரில் வந்து சந்திக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேற்குவங்க மாநில ஆளுநர் ஜகதீப் தன்கர் தனது ட்விட்டர் பக்கத்தில்: இது துரதிருஷ்டவசமானது, எதிர்பாராதது. மாநிலத்தில் தற்போது எழுந்துள்ள சூழல் குறித்து நாளை வசதியான நேரத்தில் ராஜ்பவனுக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு முதல்வர் மம்தா பானர்ஜியை கோரியுள்ளேன். மாநில தலைமைச் செயலாளரையும், காவல்துறை தலைவரையும் அழைத்து இருந்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை. இது இது துரதிருஷ்டவசமானது, எதிர்பாராதது’’ என கூறியுள்ளார்.

Tags : Continuing Struggle ,West Bengal ,Governor ,Mamata Banerjee , West Bengal Struggle, Mamta Banerjee, Governor's Call
× RELATED நாளை தேர்தல் நடக்கும் கூச் பெஹாருக்கு...