×

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி!

புதுடெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பலத்த எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு சட்டமானது. இந்த சட்டம், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2015ம் ஆண்டுக்கு முன்னர் வரை இந்தியாவில் குடியேறிய அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிவகுக்கிறது. ஆனால், இந்த மசோதாவில் இடம்பெற்ற 6 மதத்தினருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் முஸ்லிம்களின் பெயர் இல்லை. இதுவும் இந்த மசோதாவை எதிர்க்க முக்கிய காரணமாகும்.

மசோதாவை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. அதேபோல், டெல்லி, அலிகார் உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டங்கள் வலுத்துள்ளன. இதற்கிடையில், குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா ஆகியோர் சார்பிலும் மற்றும் அகில அசாம் மாணவர்கள் சங்கம், ரிகாய் மஞ்ச் உள்ளிட்ட சில அமைப்புகள் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 13ம் தேதி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுவரை 14 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்திய அரசியலமைப்பின் சட்ட பிரிவு 14க்கு எதிராக இந்த சட்டம் இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் ஆலோசனையின் பெயரில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சி அழுத்தம் திருத்தமாக தனது எதிர்ப்பை காட்டியுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இதன் மீதான விசாரணை விரைவில் நடக்கும் என தெரிகிறது.


Tags : People's Justice Party ,Supreme Court ,Makkal Needhi Maiam Party , Citizenship Amendment, Supreme Court, Kamal Haasan, Makkal Needhi Maiam
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...