×

நெல்லை அருகே பாலம் இல்லாததால் இறந்தவர் உடலை ஆற்றுக்குள் இறங்கி சுமந்து செல்லும் கிராம மக்கள்

நெல்லை: களக்காடு அருகே பாலம் இல்லாததால் ஆற்றுக்குள் இறங்கி தண்ணீருக்குள் உடலை கிராம மக்கள் ஆபத்துடன் சுமந்து செல்லும் அவலம் நீடித்து வருகிறது. நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள வடக்கு மூங்கிலடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பறையர் இன மக்களின் இடுகாடு அங்குள்ள மூங்கிலடி ஆற்று கரையில் உள்ளது. வடக்கு மூங்கிலடியில் உயிரிழப்பவர்களின் சடலங்களை ஆற்றுக்கரையில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்து வருகின்றனர். இடு காட்டிற்கு செல்ல ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். ஆனால் அங்கு பாலம் இல்லை. இதனால் கிராம மக்கள் சடலங்களை ஆற்றுக்குள் இறங்கி பெரும் சிரமத்திற்கிடையே சுமந்து செல்கின்றனர். மழைக்காலங்களில் கால்வாயில் அதிகளவில் வெள்ளம் வரும் போது தண்ணீருக்குள் இறங்கி கயிறு கட்டி, சடலங்களை ஆபத்தான முறையில் சுமந்து செல்கின்றனர். அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளி சுந்தர்ராஜ் (70) உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.

அவரது உடலையும் நேற்று இடுப்பளவு தண்ணீரில் இறங்கியே சுமந்து சென்றனர். எனவே ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இன்னும் பாலம் அமைக்கப்படாததால் கிராம மக்களின் அவல நிலை நீடித்துக் கொண்டே இருக்கிறது. விஞ்ஞான உலகில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னமும் இடுகாட்டுக்கு செல்ல தண்ணீருக்குள் போராட்டம் நடத்தும் நிலை இருப்பது வேதனை தரக்கூடிய விஷயமாகவே உள்ளது. இனிமேலாவது தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து மூங்கிலடி ஆற்றில் பாலம் அமைத்து தர வேண்டும் என்பதே கிராம மக்களின் விருப்பமாக உள்ளது.

Tags : bridge ,paddy ,river , Kalukkadu, the bridge
× RELATED கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில்...