நிர்பயா நிதி 190 கோடியில் 3% மட்டுமே செலவு செய்த தமிழக அரசு: மத்திய அரசு குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிர்பயாவின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த படுகொலைக்குப் பிறகு, பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு ‘நிர்பயா நிதி’ என்ற திட்டத்தை தொடங்கியது. இதன்மூலம், பெண்கள் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்காக மாநில அரசுகளுக்கு பல கோடி ரூபாய் நிதியாக அளிக்கப்படுகிறது. இந்த நிதியை பல்வேறு மாநிலங்கள் முழுமையாக பயன்படுத்துவது இல்லை என தெரிய வந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில், இந்தநிதி பயன்படுத்தப்பட்ட புள்ளி விவரங்களை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா நிதிக்காக மத்திய அரசு 1,649 கோடி ஒதுக்கியுள்ளது. இதில், இதுவரை 147 கோடியை மட்டுமே மாநிலங்கள் செலவு செய்துள்ளன. தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட 190.68 கோடியில் வெறும் 3 கோடி மட்டுமே இதுவரை செலவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, அண்மையில் நாட்டையே உலுக்கிய பாலியல் கொடூர சம்பவங்கள் அரங்கேறிய உபி, தெலங்கானா மாநிலங்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மிக குறைந்தளவே செலவிட்டுள்ளன. கர்நாடகாவுக்கு ஒதுக்கப்பட்ட 191 கோடியில் 7 சதவீதமும், நிர்பயா கொடூரம் நிகழ்ந்த டெல்லிக்கு ஒதுக்கப்பட்ட 390 கோடி நிதியில் 5 சதவீதமும் மட்டுமே செலவிடப்பட்டு உள்ளது.


Tags : The Central Government ,Government of Tamil Nadu , Nirbhaya fund, 190 crores, only 3% of expenditure, the Government of Tamil Nadu, Central Government alleges
× RELATED டெல்லி ரயில் நிலையத்தில் புதுமை...