பெரம்பூரில் இருக்கிறார் சச்சின் தேடிய நபர்!: 19 ஆண்டு பசுமை நினைவால் நெகிழ்ச்சி

சென்னை: மாஸ்டர் பேட்ஸ்மேன், சாதனை நாயகன் உட்பட பல அடைமொழிக்கு சொந்தக்காரராக விளங்கியவர் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  கடந்த 14ம் தேதி ஒரு பதிவிட்டிருந்தார்.  அந்த பதிவு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ‘சென்னையில் நான்  தங்கியிருந்த ஓட்டலில் வேலை செய்த  ஒருவர் எனக்கு  கொடுத்த டிப்ஸ் பயனுள்ள வகையில் இருந்தது. அவர் எனது முழங்கை பகுதியில் பயன்படுத்தக் கூடிய கவசத்தை (எல்போ கார்ட்) சரி செய்ய வேண்டும் என கூறியிருந்தார். அவர் தற்போது எங்கே உள்ளார் என தெரியவில்லை. அவரை கண்டுபிடிக்க உதவுங்கள்’ என சச்சின் பதிவிட்டிருந்தார். இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி அந்த நபர் யார் என அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் அந்த நபர் சென்னை பெரம்பூரை அடுத்த பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த   குருபிரசாத் (45) என்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி குருபிரசாத் செய்தியாளரிடம் கூறியதாவது: கடந்த 2001ல் தாஜ் ஓட்டலில் தனியார் ஏஜென்சி மூலம் நான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன்.  அப்பொழுது இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய போட்டி நடந்த நேரம்.  போட்டி முடிந்தவுடன் வீரர்கள் தங்களது அறைக்கு திரும்பியபோது, நான் சச்சினிடம் ஒரு தகவல் கூறலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் சம்மதித்தார். நான் அவரது  முழங்கை பகுதியில் பயன்படுத்தக்கூடிய கவசத்தின் அளவை குறைத்து சிறிய அளவில் பயன்படுத்தினால் பேட்டிங் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என தெரிவித்தேன். உடனடியாக இதுபற்றி யோசிப்பதாகக் கூறினார்.

அடுத்தடுத்த போட்டிகளில் சச்சின் முழங்கை பகுதியில்  பயன்படுத்தக்கூடிய கவசத்தின் அளவு குறைக்கப்பட்டது. அது முதல் அவரது பேட்டிங் ஸ்டைலும் மாறியது. அந்த சம்பவம் அப்போது முடிந்துவிட்டது. அதுபற்றி நானும் மறந்துவிட்டேன். தற்போது 19 வருடங்கள் கழித்து சச்சின்  அந்த நிகழ்வை ஞாபகம் வைத்து ட்விட்டரில் பதிவு செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவுக்காக விளையாடிய  மிகச்சிறந்த வீரர் அவர். நான் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் போட்டியை ரசித்து பார்ப்பேன். அவர் நன்றாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவ்வாறு கூறினேன். மற்றபடி வேறு எந்த விளம்பரத்தையும் நான் தேடவில்லை. நான் அவரது தீவிர ரசிகன். எனது வீட்டுக்கு வந்து உணவு அருந்தினால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

சச்சினின் ட்விட்டர் பதிவு உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த நிலையில், அவர் தேடிய நபரின் இருப்பிடம் தெரிந்ததும் பேட்டி எடுப்பதற்காக செய்தியாளர்கள் குவிந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விரைவில் சச்சினிடம் இருந்து அழைப்பு வரும். அவரை நேரில் பார்க்க போகிறோம் என்ற  ஆர்வத்தில் குருபிரசாத் உள்ளார்.

Tags : Sachin ,Perambur , Sachin, searched person, is in Berampur
× RELATED சசிகலாவின் பினாமி பெயரில் உள்ள 1,500...